சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸாவதற்காக, குறுக்கே நிற்கும் தடைகளை நீக்கும் விதமாக விஜய் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனால் படம் விரைவில் ரிலீசாகப்போகிறது என்பதும் தான் கடந்த சில நாட்களாகவே மீடியாக்களில் பரவலாக அடிபடும் செய்தி. ஆனால் விஜய் அதுபற்றி எதுவும் வெளியே சொல்லிக்கொள்ளவும் இல்லை.
அதே சமயம் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பதால் அஜித் ஏன் உதவி செய்யவில்லை என பரவலாக சமூக வலைதளங்களில் பிரச்சனைக்கு திரி கொளுத்த ஆரம்பித்தார்கள். மெல்லப்புகைவதை கண்ட சிம்பு உடனே டிவிட்டரில் விஜய், அஜித் இருவரும் தனது பட வெளியீட்டில் உதவினார்கள் என சொல்லி மேலும் புகையாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.
ஆனால் ‘புலி’ பட இசைவெளியீட்டு விழாவில் தனது மகன் படம் வெளியாவதற்கு உதவியதாக விஜய் மீது திருப்பாவை திருவம்பாவை பாடாத குறையாக பாமாலை சூட்டினார் டி.ஆர். அவரது பேச்சில் இருந்து வெளிப்பட்ட விஷயம், சிம்பு பட விஷயத்தில் விஜய் உதவினாரே தவிர அஜித் உதவவில்லை என்பதுதான்.. அவர் பேசியதை கவனியுங்கள்..
“தலைவா படப்பிரச்சனையின்போது சிம்பு விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணா நான் உங்களுக்கு பின்னே துணையாக இருப்பேன் என்று பல வருடங்களுக்குமுன் ஒரே ஒரு ட்வீட் செய்திருந்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சிம்புவின் வாலு படப்பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் விஜய். சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம் ஆனால் விஜய்க்கு சிம்பு நண்பன் மட்டுமல்ல தம்பியும் கூட..”
ஆக, இவரது பேச்சிலிருந்து சிம்புவுக்கு அஜித் உதவவில்லை என்பதுதான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.