பொதுவாக எந்த பீல்டாக இருந்தாலும் வளர்ந்துவரும் ஒரு ஹீரோ, தனக்கென ஸ்திரமாக ஒரு இடத்தை பிடித்து நின்றுகொள்ளத்தான் நினைப்பார்கள். குறைந்த பட்சம் 25 படங்களில் நடித்த அனுபவத்திற்கு பிறகோ அல்லது சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் கழிந்த பிறகோ தான், ஏன் நாமே தயாரிப்பாளராக மாறக்கூடாது என்கிற எண்ணம் அவர்களுக்கு மெதுவாக தலைதூக்கும்.
தனுஷ், விஷால், சூர்யா இவர்கள் தயாரிப்பாளர்களாக மாறிய வரலாறை கவனித்து பார்த்தால் இது தெளிவாக தெரியும். ஆனால் அறிமுகான இந்த நான்கே வருடத்தில் நான்கைந்து படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் கூட, தனது படத்தை இனி தானே தயாரிப்பதாக முடிவு செய்திருக்கிறாராம்.
இதை புத்திசாலித்தனம் என்பதா, இல்லை அவசரக்குடுக்கைத்தனம் என்பதா என தெரியவில்லை. இதன்படி, இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்றும் இனி யாருக்கு படம் பண்ணுவதாக இருந்தாலும், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக தானே அந்தப் படத்தை தயாரிக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறாராம். அதாவது பரவாயில்லை.. அப்படி தயாரித்த படத்தை எந்த தயாரிப்பாளர் அதிக தொகைக்கு கேட்கிறாரோ அவருக்கு விற்றுவிடுவாராம். சரி திடீரென சிவகார்த்திகேயனுக்கு ஏன் இந்த தயாரிப்பு எண்ணம் எழுந்ததாம்..? காரணம் இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு இப்போது ஒரு படத்திற்கு ஐந்து கோடி வரை சம்பளம் தருகிறார்கள். ஆனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த பட்சமாக வைத்தாலும், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கிறதாம். அதற்கு பதிலாக பேசாமல் நாமே தயாரித்துவிட்டால் தயாரிப்பாளருக்கு செல்லும் லாபத்தை தனது பக்கமாக திருப்பி விடலாமே என்பது தான் சிவகார்த்திகேயனின் மெகா பிளான். சிவகார்த்திகேயனின் இந்த முடிவை கேள்விப்பட்டு, அவரை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.