சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ்


சிவகார்த்திகேயன் இன்று வசூலை அள்ளித்தரும் மாஸ் ஹீரோக்கள் ஐந்து பேர் பட்டியலில் ஒருஇடத்தை பிடித்துவிட்டார். அந்த அளவுக்கு அவரது படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராகி, பெரிய அளவில் வியாபாரமும் ஆகின்றன. அதேபோல அவரது சம்பளமும் நெருங்கமுடியாத அளவுக்கு ஏறி வருகிறது..

சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் பேசும்போது, சிவகார்த்திகேயன் இப்போது நெருங்கமுடியாத தூரத்தில் இருக்கிறார். சம்பளமாக கைவிரல்கள் தாண்டியும் (அதாவது பத்து கோடிக்கும் மேலே) எதிர்பார்க்கிறார் அவரை வைத்து படம் பண்ணுவது நம்மால் முடியாது என குறைபட்டு கொண்டார் பாண்டிராஜ்.

இதனால் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாக வெளியே பேசப்பட்டது. இந்தநிலையில், தான் முதன்முதலாக தயாரித்துள்ள ‘கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாண்டிராஜை சிறப்பு விருந்தினராக அழைத்து அவரது கையால் ஆடியோவை வெளியிட வைத்து அவரை கௌவரப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன். இதன்மூலம் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் சிவகார்த்திகேயன்.