வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சௌந்தரராஜா “திண்டுக்கல் பொன்ராம்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பிரமாண்ட வெற்றிபெற்ற சந்தோசத்தோடு, கூடவே விஷால், சித்தார்த் பாராட்டிய சந்தோசமும் சேர்ந்து கொண்டிருக்கிறது சௌந்தரராஜாவிற்கு.
இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், ஜிகர்தண்டா படம் இவ்ளோ பெரிய வெற்றி பெற மீடியா முக்கியமான காரணம். ஜிகர்தண்டா படத்தையும், அதில் என் கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும், அத்தனை மீடியாக்களுக்கும் ஜிகர்தண்டா குழுவில் ஒருவனாக நன்றிகளை தெரிவிக்கிறேன்.
ஜிகர்தண்டா படம் பிரிமியர் ஷோவில் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார் படத்தின் ஹீரோ, சித்தார்த். விஷால் சார் ஹைதராபாத்தில் படம் பார்த்துவிட்டு, சௌந்தர் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று வாட்ஸ்ஆப்பில் மெசெஜ் பண்ணார். வளர்ந்து வரும் நடிகனை பெருந்தன்மையோடு பாராட்டிய விஷால் சாருக்கும், சித்தார்த் சாருக்கும் என் சந்தோசம் நிறைந்த நன்றிகள்.
எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் அண்ணன், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நண்பர்கள் விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பின் நன்றிகள்.
சுந்தரபாண்டியனில் ஆரம்பித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், அதிதி, என்று தொடர்ந்த என் பயணத்தில் ஜிகர்தண்டா முக்கியமான படம். இப்போ, எல்.ஜி.ரவிச்சந்தர் சார் இயக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத் சாரின் நண்பனாகவும், ஹரி சார் இயக்கும் பூஜை படத்தில் விஷால் சாரின் நண்பனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறேன்.
என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.