தமிழ்சினிமாவை பொறுத்தவரை அடுத்த சூப்பர்ஸ்டார் படத்தை கைப்பற்ற போவது யார் என்கிற யுத்தத்தை நடிகர்கள் நடத்துகிறார்களோ இல்லையோ, அவர்களது ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட நடிகர்களோ இதை கண்டும் காணாதாது போல பாசாங்காக போய்விடுகிறார்கள்.
இந்தப்போட்டியில் இடம்பிடித்திருப்பவர்கள் விஜய்யும் அஜித்தும் தான் என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனால் இது ஒரு பக்கம் இருக்க தேவையில்லாமல் சூர்யாவும் இந்தப்போட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து விடப்பட்டுள்ளார். இந்த வேலையை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்துள்ளவர் நம்ம சத்யராஜ் தான்.
சமீபத்தில் நடைபெற்ற ‘நைட் ஷோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் சூர்யா. அதனால் சூர்யாவை புகழும் விதமாக பேச ஆரம்பித்தார். இது ஒரு மரபு தானே.. சத்யராஜ் சமீபகாலமாக தெலுங்குப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதால், அங்கு உடன் நடிக்கும் பெரிய ஹீரோக்களிடம் பேச்சு கொடுப்பாராம்..
அப்படியே எந்த தமிழ் ஹீரோ படம் இங்கே நன்றாக ஓடுகிறது என ஒன்றுமே தெரியாதது போல அவர்களிடம் கேட்பாராம்.. அவர்கள் உடனே சூர்யாவைத்தான் சொல்வார்களாம்.. இதனை கேட்டு, அட நம்ம வீட்டுப்பையன் பாரு தெலுங்குலயும் கலக்குறான் என சந்தோஷப்படுவதாகவும் அவரே சொன்னார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
அடுத்த சூப்பர்ஸ்டார் நிச்சயமாக சூர்யா தான் என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.. மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சூர்யாவே ஜெர்க் ஆகியிருப்பார். இதேபோலத்தான் முன்பு ‘தலைவா’ பட விழாவில் விஜய்யை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து பேசி, அந்தப்படம் அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னப்பட சத்யராஜும் ஒரு காரணமாக இருந்தார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்கிற விவகாரத்தில் தேவையில்லாமல் சூர்யாவை நுழைத்து, சத்யராஜ் புதியதாக திரி கொளுத்தியிருக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது..