நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திரைப்படத்தை விமானம் மூலம் விளம்பரப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக இன்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானத்தில் சூரரைப்போற்று படத்தின் பாடலான ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.
மேலும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் 70 மாணவர்களும் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் இவர்களை சூர்யா கட்டுரைப்போட்டி எழுதவைத்து தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 30 மாணவர்கள் தாங்கள் செல்லா விட்டாலும் பரவாயில்லை தங்கள் பெற்றோர்கள் விமானத்தில் செல்லட்டும் என்று தங்களது பெற்றோரை அனுப்பி வைத்தனராம். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.
இதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெருமை சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்துள்ளது.
விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார்.