சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ‘ஜீனியஸ்’. இந்தப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார். நாளை (அக்-26) இந்தப்படம் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் மனம் திறந்து சில தகவல்களை கூறியுள்ளார்.
“ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீக்கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைக்காரர் பணம் கேட்டபோது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது.
நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போது தோன்றிய கதை தான் இப்படத்தின் கதை. இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.
இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார்.
இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது நான் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேசமுடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம்” என்றார் இயக்குனர் சுசீந்திரன்.