எல்லா வாரிசு ஹீரோக்களுக்கும் முதல் படத்திலேயே வெற்றி கிடைத்துவிடுவதில்லை. அதைப்போலத்தான் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படம் பெரிய அளவில் உமாபதிக்கு வரவேற்பை தரவில்லை என்பதே உண்மை..
அதனால் இந்தமுறை தானே களத்தில் இறங்கி மீண்டும் டைரக்சன் தொப்பியை அணிந்துள்ளார் தம்பிராமையா. அதற்காக பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தம்பிராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்கி வருகிறார்.
தம்பிராமையாவே களத்தில் இறங்க ஒரு காரணமும் இருக்கிறது. மைனா மூலம் தனக்கு வாழ்க்கை கொடுத்தது போல இயக்குனர் பிரபு சாலமன், தனது வாரிசுக்கும் அடுத்த படத்தின் மூலம் வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பியிருந்தாராம் தம்பிராமையா.
முதலில் சம்மதித்த பிரபு சாலமன், பின்னர் இன்னொரு புது நடிகரை வைத்து படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். இதனால் நடிகர் சற்றே அப்செட்டாம். தானே சொந்தமாக படம் எடுத்து மகனை உயர்த்துவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார். அந்த வருத்தம் இருந்தாலும் தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதால் இயக்குனர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் வாசிக்கவில்லையாம் தம்பி ராமையா.