சங்கத்தலைவர் என்பதை மறந்து வட்டிக்காரர் முகம் காட்டிய விஷால்..?


கடந்த நான்காம் தேதி விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ படம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.. ஆனால் அதற்கு முதல்நாள் அதாவது 3ஆம் தேதி விஜய்சேதுபதிக்கு அது தூங்கா இரவாக மாறியது… ஆம்.. அந்தப்படத்தை தயாரித்த நந்தகோபால் இந்தப்படத்திற்காக வாங்கிய கடன் பிரச்னை 3 கோடி ரூபாய் கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் கழுத்தில் கத்தி வைத்து இறுக்கியது.

படம் வெளியாகவேண்டும் என எவ்வளவோ போராடி பார்த்த விஜய்சேதுபதி, கடைசியில் தானே அந்த 3 கோடி ரூபாயை தருவதாக பைனான்சியரிடம் பேசி கடனை ஏற்றுக்கொண்டு அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால் அபோதுதான் புதிய சிக்கல் வாசலில் வந்து நின்றது. அதுவும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் மூலம்.

ஆம். விஷால் நடித்த கத்திச்சண்டை படத்தை தயாரித்ததும் இதே நந்தகோபால் தான். அப்போது அந்தப்படத்திற்காக அவர் வாங்கிய கடன் தொகை 2.5 கோடி ரூபாய் ரிலீஸ் நேரத்தில் பூதாகரமாக நிற்க, இப்போது விஜய்சேதுபதி செய்தது போல அப்போது விஷால் தயாரிப்பாளருக்காக தான் அந்த கடனை ஏற்றுக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்ய வைத்தார்.

அந்த இரண்டரை கோடி ரூபாய்க்கு விஷால் தான் இதுவரை வட்டி கட்டி வருகிறார். இப்போது 96 படம் ரிலீஸாகும் நேரத்தில் கிடுக்கிப்பிடி போட்டால் தான் தன் கைக்கு காசு வரும் என்பதை உணர்ந்து, என் பணத்தை செட்டில் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என நந்தகோபால் தரப்புக்கு கடிதம் எழுதி, தனது தரப்பு நபர் ஒருவரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

யார் ஒரு தயாரிப்பாளரின் படத்தை முன்னின்று காப்பாற்றும் சங்கத்தலைவராக இருக்கிறாரோ அவரிடமிருந்தே இப்படி ஒரு சிக்கல் வரும் என்பதை விஜய்சேதுபதி எதிர்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் தயாரிப்பாளர் நந்தகோபாலின் இந்த கடன் பிரச்சனைகள் எதுவும் அவருக்கு அப்போதுவரை தெரியவே தெரியாது.

பின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவாவின் உதவியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, விஷாலுக்கு தரவேண்டிய கடனை ஒன்றரை கோடியாக பேசி முடித்து, அந்தக்கடனையும் தானே ஏற்றுக்கொள்வதாக விஜய்சேதுபதி ஒப்புக்கொள்ள, ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்து படம் ரிலீஸானது. இந்த களேபரங்களால் நான்காம் தேதி காலை இரண்டு காட்சிகள் திரையிடப்படவில்லை. மதியத்துக்கு மேல் படம் ரிலீஸானது.

ஆனால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷாலின் இந்த அடாவடி நடவடிக்கை தயாரிப்பாளர்கள் பலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவர்கள் மூலமாக விஷாலுக்கு எதிரான ஒரு தோற்றம் திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஏற்பட ஆரம்பித்தது.

இதனை கண்டு அரண்டுபோன விஷால், அவசர அவசரமாக பிரஸ்மீட் கூட்டி, தானே தனது கடனை ஏற்றுக்கொள்கிறேன் என்றும், தான் பட்ட சிரமம் விஜய்சேதுபதிக்கு ஏற்பட வேண்டாம் என்றும் கூறி அப்படியே பல்டி அடித்து சரண்டர் ஆனார்.

விஷால் தனது பணத்தை கேட்டது தவறில்லை.. அவரும் அந்தப்பணத்திற்கு இத்தனை நாட்கள் அநியாயமாக வட்டி கட்டி கஷ்டப்பட்டு வருகிறார் தானே.. ஆனால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்துகொண்டு, அவரும் ஒரு கந்துவட்டி பைனான்சியர் போல கடைசி நேரத்தில் கழுத்தில் துண்டு போட்டு இறுக்கி ஒரு படத்தின் ரிலீசையே தடுத்து நிறுத்தியதைத்தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தப்பிரச்சனை தொடர்பாக அவர் முன்கூட்டியே தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் பேசியிருக்கலாம். அல்லது விஜய்சேதுபதியின் கவனத்துக்கு இதை கொண்டுபோயிருந்தால் அவராவது மாற்று ஏற்பாடு செய்து, இந்த சிக்கல் வாராமல் பார்த்துக்கொண்டிருப்பார். இந்த விஷயம் கூட தலைவராக இருக்கும் விஷாலுக்கு எப்படி தோன்றாமல் போனது என்றுதான் பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.