சூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி தவறாக சித்தரிக்கவில்லை ; ஜெயம் ரவி


சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது அரசியல் நிலைப்பாட்டை, கிண்டலாக விமர்சித்து அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு மோசமான முன்னுதாரண செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.. அதற்கு சமீபத்திய உதாரணமாக நடிகர் ஜெயம் ரவியும் அவர் நடித்துள்ள கோமாளி படத்தின் ட்ரெய்லரும் அமைந்துவிட்டது. டிரெய்லரை பார்த்த ரஜினி ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கே சென்று உள்ளார்கள்.

இந்த கதைப்படி ஜெயம் ரவி கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கோமாவில் இருந்து விட்டு பின்பு நினைவு திரும்புவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவர் கோமாவில் இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக அவரது நண்பர் யோகிபாபு, “நீ இத்தனை வருடம் கோமாவில் தான் இருந்தாய்.. வேண்டுமானால் பார்” என்று கூறி அங்கிருந்த டிவியை ஆன் செய்கிறார்.. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நான் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று பேசுகிற காட்சி ஓடுகிறது.. அதை பார்த்து ஜெயம் ரவி இல்ல இல்ல இது 1996 என்று கூறுகிறார்.. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறார் என்கிற அர்த்தத்தில் இந்த காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதுதான் தற்போது தமிழகமெங்கும் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.. இதையடுத்து இந்தக்காட்சி நீக்கப்படும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஜெயம் ரவியும் இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது,

“நான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன். அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்துவருகிறேன். எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம்வருகிறேன்.

நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறது. இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருந்தாலும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் சில ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதிதீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது நடிப்பும் ஸ்டைலும் எங்கள் இயல்பிலேயே ஊறிப்போயிருக்கும் தவிர்க்க இயலாத விஷயங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது. முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது.

எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான உள்நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியை படத்தில் இருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம். 15.8.2019 அன்று திரையரங்குகளில் கோமாளியாக உங்களைச் சந்திக்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்..