சினிமாவில் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. மிகப்பெரிய இடத்திற்கு வந்ததும் தாங்கள் கடந்து வந்த பாதையை, சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்ததை, பூங்காக்களில் கதை விவாதம் நடத்தியதை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவார்கள். சமீபத்தில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோரின் செயலை பார்க்கும்போது இவர்களும் அந்த பட்டியலை சேர்ந்தவர்கள் தானோ என்கிற சந்தேகமே எழுகிறது.
சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோ என்ற அமைப்பின் பெயரில் திரைப்பட உதவி இயக்குநர்களுக்காக திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் சினிமா பட்டறை ஒன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டறையில் இயக்குநர்கள் மிஸ்கின், வெற்றிமாறன், ராம், இசையமைப்பாளர் ஆரோல் கரோலி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் 2 நாள் நடைபெறும் சினிமாபட்டறைக்கு 10 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது தான் உதவி இயக்குநர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. அடுத்த வேலை சோறு நிச்சயமா என தேடாமல், சினிமாவை மட்டுமே சுவாசித்து வாழும் உதவி இயக்குனர்கள் பலரும் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுபவர்கள் தான்.
அறைவாடகை கொடுக்க வழியில்லாத உதவி இயக்குநர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் இப்போது பல இயக்குனர்களின் உதவியாளர்கள் மெத்தப்படித்து விட்டு, ஐடி வேலைக்கு செல்வதற்கு பதிலாக சினிமாவை தேடிவரும் வசதியானவர்கலாகத்தான் இருக்கிறார்கள்.. அதனால் இவர்களிடம் இப்படி ஒரு ரூட்டில் காசு பார்க்கலாம் என மேற்கூறிய இயக்குனர்கள் முடிவு செய்திருக்கலாம்..
அப்படி ஆட்களிடம் காசு பார்ப்பதற்காக, வயிற்றை கட்டிக்கொண்டு பசியுடன் சினிமாவை நேசிக்கும் உதவி இயக்குனர்களை சுரண்டும் மிஷ்கின், வெற்றிமாறன், ராம் ஆகியோரது செயல் உதவி இயக்குநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.