அவ்வப்போது சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த இயக்குனர் பாக்யராஜ், நீண்ட நாளைக்குப்பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் உண்டு. கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன், சந்தியா இருவரும் நடித்துள்ளார்கள். முதல்வராக மனோபாலா நடித்துள்ளார். பாக்யராஜ் கதை-வசனம் எழுத, விவேகானந்தன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்து நான்கு மாதங்களாகியும் இந்தப்படம் வெளியாகும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. விசாரித்த பின்னர் தான் தெரிகிறது தயாரிப்பாளருக்கும் பாக்யராஜுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தான் ரிலீஸ் தாமதமாக காரணம் என்று. இந்தப்படத்தின் ஆரம்பகட்டத்தில் இயக்குனர் விவேகானந்தன் சொன்ன கதை, தான் யோசித்து வைத்திருந்த கதையின் சாயலிலேயே இருந்ததால் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் இயக்குனர் பாக்யராஜ்.
அத்துடன் கதை, வசனம் எழுதும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். ஆனால் படம் சொன்ன பட்ஜெட்டைவிட எகிறிவிட்டது. சமீபத்தில் எடுத்தவரை போட்டுபார்த்த தயாரிப்பாளருக்கு படம் திருப்தியை தரவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கவேண்டும் என பணம் கேட்டிருக்கிறார். ஆனால் இனிமேல் என்னால் பணம் தரமுடியாது எடுத்தவரை போதும், எப்படியோ படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிடுங்கள் என கூறிவிட்டார். இந்த தகவல் பாக்யராஜின் காதுக்கு போக அவர் மிகவும் சங்கடப்பட்டுவிட்டார். தற்போது உள்ளபடி படம் ரிலீசானால் படம் நன்றாக போகாது என்பதுடன் அந்த கெட்டபெயர் தனக்குத்தான் வரும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளரிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.
முதலில் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதை காரணம் காட்டி மறுத்த தயாரிப்பாளார் அதன்பின் க்ளைமாக்ஸை படமாக்க பணம் தர ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் இத்தனை சிக்கலையும் மீறி துணை முதல்வர் பதவியேற்பாரா..? அப்படி ஏற்றாலும் எத்தனை நாட்கள் பதவி நீடிக்கும் (அதாவது தியேட்டரில் படம் ஓடும்) என்று தெரியவில்லை என்கிறார்கள் பிரச்சனையை முழுதாக அறிந்தவர்கள்..