ஒரு பணக்காரன் தெருவில் விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு போகிறான். வழியில் வயதான ஒருவர் மீது மோதி அவரது காலை ஒடித்து விடுகிறான்.. காரை விட்டு இறங்கி முன்னால் வந்து பார்த்தவன், “அச்சச்சோ.. ஹெட்லைட் உடைஞ்சிருச்சே.. பம்பர் வளைஞ்சிருச்சே” என அடிபட்டவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் காரைப்பற்றி கவலைப்பட்டால், அது எந்த அளவுக்கு திமிராக இருக்குமோ அதைத்தான் த்ரிஷாவும் செய்து தேவையில்லாமல் வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்.
பிராணிகளுக்காக இரக்கப்படும் த்ரிஷாவின் இரக்க குணம் நாடறிந்தது. அப்படித்தான் நேற்று முன் தினம் உத்ரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் குதிரை ஒன்றின் காலை உடைத்ததற்கு “மிகவும் வெட்கக்கேடான செயலை செய்த நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்” என நடிகை த்ரிஷா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதே தினம் தான் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் ஒருவர் ஆணவ கொலைசெய்யப்பட்ட சம்பவமும் நடந்து தமிழகமே திகித்துக்கொண்டிருந்த வேளையில், பறிபோன மனித உயிருக்காக கவலைப்படாமல், அந்த அராஜகத்துக்கு குரல் கொடுக்காமல், குதிரைக்காக குரல் கொடுக்கப்போய் அது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது அவரே எதிர்பாராதது..
“குதிரைக்காக குரல் கொடுப்பதை நிறுத்து கழுதையே” என சோஷியல் மீடியாவில் அவரை ஆயிரக்கணக்கில் வறுத்தெடுக்க ஆரம்பிக்க அரண்டுவிட்டார் த்ரிஷா. சக மனிதருக்காக கவலைப்பட தெரியாத த்ரிஷா மனித ஜீவியா இல்லை வேற்றுக்கிரகவாசியா என அவரை பலரும் திட்டித்தீர்த்துவிட்டனர். ஏற்கனவே தமிழர்களின் உணர்களை புண்படுத்தும் விதமாக ‘பீட்டா’ அமைப்பில் உறுப்பினராக இருந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களை கூறி தமிழர்களின் வயிற்றெரிச்சலை கட்டிக்கொண்ட த்ரிஷா, இப்போது குதிரைக்காக பரிந்து பேசி தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், ஹன்ஷிகா அனாதைக்குழந்தைகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறாரே.. அதேபோல் பிராணிகள் மீது அக்கறைப்படும் த்ரிஷா எங்கே பத்து தெருநாய்களை எடுத்து வந்து தன வீட்டில் வளர்ப்பாரா பார்ப்போம்..? எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.