கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து அரங்கேறி வரும் பிரச்சனைகள் பூதாகரமாக அவ்வப்போது அச்சுறுத்தினாலும் இனி இதுபோன்ற தேவையற்ற பிரச்சனையை கிளப்புபவர்களுக்கான ‘செக்’ வைப்பதற்கான சரியான வழியை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் முழுவதும் ‘கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது என்றால், இந்த மாதம் சிக்கியது ‘உத்தமவில்லன்’. கொம்பன் படத்தை திரையிட விடாமல் தடுத்தது கிருஷ்ணசாமி என்கிற அரசியல் தலைவர் என்றால் உத்தம வில்லனுக்கு ஒரு சில கட்சிகளுடன், இன்னொரு பக்கம் சினிமா தொடர்புள்ள திரைப்பட அதிபர்கள் சங்க தலைவரும் உடந்தையாக நின்று தடுப்பதுதான் வேதனையான விஷயம்.
உத்தம வில்லன் படத்தில் வைஷ்ணவர்களை புண்படுத்தும்படியான பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தடை கோரி வழக்கு தொடர்ந்தார்கள். “உத்தமவில்லனில் யார் மனதையும் புண்படுத்தும்படியான காட்சிகள் இடம்பெறவில்லை அதனால் இந்த முறை எந்த காட்சிகளையும் நீக்க சம்மதிக்க மாட்டேன்” என்று கமல் பதிலடி கொடுத்தார்.
ஒருகட்டத்தில் திரையுலக சங்கங்களும் கட்சிப்பிரமுகர்களும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட சுமூகமாக ஒரு முடிவை எடுத்துவிட்ட நிலையில் தான், திரைப்பட அதிபர்கள் சங்க தலைவரான ‘ரோகிணி தியேட்டர்ஸ்’ பன்னீர் செல்வம் தனது கட்டப்பஞ்சாயத்து கணக்கு புத்தகத்தை தூக்கிக்கொண்டு திருப்பதி பிரதர்சிடம் வசூலுக்கு கிளம்பியிருக்கிறார்..
சூரி ஒருபடத்தில் சொல்வது போல, “உனக்கென்னடா பிரச்சனை.?” என கேட்கத்தோன்றுகிறது அல்லவா..? அவருக்கு தியேட்டரில் படத்தை ஒட்டி லாபம் சம்பாதிப்பதில் இருந்த ஆர்வம் எல்லாம் போய்விட்டது. திரைப்பட அதிபர்கள் சங்க தலைவராகிவிட்டதால் அந்த பதவியை வைத்து நாலுபேரை மிரட்டி பஞ்சாயத்து பண்ணி, நாலு காசு பார்க்கலாம் என்பது தான் அவரது மெகா பிளான்.
சரி குறிப்பாக உத்தமவில்லனுக்கு எதிராக ஏன் களம் இறங்கினார்..? ‘விஸ்வரூபம்’ பட வெளியீட்டு சமயத்தில் கமலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் காம்படிஷன் கமிஷனில் தியேட்டர் அதிபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் கமல். அந்த வழக்கில் இப்போது தியேட்டர் அதிபர்களுக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.
எனவே வழக்கை வாபஸ் வாங்கும்படி கமலிடம் கோரிக்கை வைத்தனர் தியேட்டர் அதிபர்கள். கமல் அதற்கு மறுத்துவிட, அவரை வைத்து படம் எடுத்துள்ள சுபாஷ் சந்திரபோஸை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் சில தியேட்டர் அதிபர்கள். கணிசமான தொகையை கமிஷனாக கொடுத்தால்தான் உத்தமவில்லன் படத்தை ரிலீசுக்கு அனுமதிப்போம் என, பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கமல், தான் தொடர்ந்த வழக்கில் சமரசத்துக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தீர்ப்பு கோர்ட்டின் கைகளில் தான் இருக்கிறது என்றும் திருப்பூர் விநியோகஸ்தரான சுப்ரமணியம் குறிப்பிட்டார். அதே நேரம் லிங்குசாமி பேசும்போது குறிப்பிட்ட சிலர் பணத்தை கேட்டு மிரட்டுவதாக சூசகமாக குறிப்பிட்டார்.
அனைவருக்கும் அது ரோகிணி பன்னீர் செல்வம் என்பது தெரிந்தே இருந்தது. பின்னே தனக்கு 5௦ லட்ச ரூபாயும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கு 5௦ லட்ச ரூபாயும் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் கமிஷன் கொடு.. இல்லை என்றால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்றல்லவா மிரட்டல் விடுத்திருக்கிறார் ‘ரோகிணி’ பன்னீர் செல்வம். பிரச்சனையை ஆறப்போட அப்போதைக்கு திருப்பதி பிரதர்ஸ் போஸ் 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தகவல்.
இது திரையுலகம் இதுநாள் வரை சந்திக்காத கோணத்தில் இருந்து உருவாகியுள்ள பிரச்சனை. ஆனால் கமலின் பக்கம், திருப்பதி பிரதர்ஸின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து பல தியேட்டர் அதிபர்கள் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பன்னீர் செல்வத்தை எதிர்த்து கேள்வி கேட்க, ஆள் அங்கிருந்து உடனே எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் ‘ரோகிணி’ பன்னீரை சங்கத்தின் எந்தப் பொறுப்பிலும் வைக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். அதோடு பன்னீர் செல்வம் லீசுக்கு விட்டிருக்கும் ‘ரோகிணி’ தியேட்டர்களுக்கும் இனி எந்தப் படங்களையும் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம்
சென்னையில் 22 தியேட்டர்களில் உத்தமவில்லனை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள அபிராமி ராமநாதன், தனது முழு ஆதரவும் உத்தமவில்லன் ரிலீஸுக்கு உண்டு என பகிரங்கமாகவும் அறிவித்துவிட்டார். எப்படியோ கொம்பன் பிரச்சனையில் ஒன்று சேர்ந்து தங்களது ஒற்றுமையை பதிவு செய்த திரையுலகத்தினர், இனி வரும் காலங்களில் இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், தேவையில்லாத பொய் விளம்பர வழக்கு போடுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக தங்களது பிடியை இறுக்க வேண்டும்..
குறிப்பாக சொல்லப்போனால் இது போன்ற வீணர்களுக்கு ‘பயம்’ காட்டணும்….