பிரபல ஹீரோ மனோரஞ்சனாகிய கமல், தன்னை வளர்த்துவிட்ட குருவான பாலசந்தரை ஒதுக்கிவிட்டு, தனது மாமானாரின் தயாரிப்பில் கமர்ஷியல் படங்களாக நடித்து தள்ளுகிறார். அவரது குடும்ப டாக்டர் ஆண்ட்ரியா மூலம் தனக்கு ப்ரெய்ன் ட்யூமர் இருப்பதை அறியும் கமல், பாலசந்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தன் நிலையை சொல்லி, தனது மரணத்திற்குள் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கெஞ்சுகிறார்.
கமலின் நிலையறிந்த பாலசந்தரும் மனமிறங்கி வர, வரலாற்று படம் ஒன்றை நகைச்சுவையாக எடுக்க தொடங்குகின்றனர். தனது கட்டுப்பாட்டில் இருந்த மருமகன், தன் சொல் கேளாமல் பாலசந்தர் பக்கம் போனதால் கோபமடைந்து விஸ்வநாத் வெளியேற, உண்மை தெரியாத கமலின் மனைவியான ஊர்வசியும் சண்டைபோட்டுக்கொண்டு தனது தந்தையுடன் வெளியேறுகிறார்.
பலவருடங்களுக்கு முன் தான் நடிகராக வளர்ந்துவந்த காலகட்டத்தில் ஊர்வசியை திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருந்த கமல், தான் அப்போது காதலித்து வந்த யாமினி என்கிற பெண்ணுக்கு உண்மைகளை எழுதி அனுப்பிய கடிதமும், யாமினி கடைசியாக கமலுக்கு எழுதிய கடிதமும் ஒருவரை ஒருவர் சேராமல் கமலின் மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கரால் மறைக்கப்படுகிறது.
ஆனால் இப்போது அந்த யாமினி இறந்துவிடவே அந்த யாமினிக்கு பிறந்த மகளான பார்வதியை அழைத்துக்கொண்டு, அவரது வளர்ப்பு தந்தையும் யாமினியை திருமணம் செய்தவருமான ஜெயராம் கமலை பார்க்க வருகிறார்.. மகள் பார்வதியோ தன அம்மாவை ஏமாற்றியவர் என்கிற வெறுப்பில் கமலை புறக்கணித்தாலும் போகப்போக நடந்ததை அறிந்து அப்பாவின் மேல் அன்பு கொள்கிறாள்..
மனைவி, மகன், மாமனார் உட்பட அனைவரும் உண்மையறிந்து கமலுடன் ஒன்று சேர்கின்றனர்.. பாலசந்தர் இயக்கும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடியும் தருணத்தில் கமல் நோயின் உக்கிர தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தான் நடித்த படத்தை பார்க்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்ததா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
நடித்துக்கொண்டிருக்கும்போதே சாகவேண்டும் என நிஜத்திலும் நினைப்பவர் கமல். படத்திலும் அதேபோல கதாபாத்திரம் கிடைத்தால் விடுவாரா என்ன..? மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கருடன் பிசினஸ் டீலிங் மற்றும் பெர்சனல் விஷயங்கள் பேசும்போது ஒரு முகம், தனது டாக்டரான ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ் பண்ணும்போது இன்னொரு முகம், குருநாதர் பாலசந்தரிடம் நெகிழும்போது வேறொரு முகம், தனக்கு பார்வதி என்கிற மகள் இருக்கிறாள் என ஜெயராம் சொல்லும்போது கலங்கும் மற்றொரு முகம் என காட்சிக்கு காட்சி நவரசங்களை மாற்றி பிரதிபலிப்பதில் உலகநாயகனுக்கு நிகர் உலகநாயகன் தான்..
மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரை படம் முழுவதும் பார்க்க முடிந்ததே பேரானந்தமாக இருக்கிறது. சார் அந்த வசனத்துல ஒரு வார்த்தைய மாத்தி சொல்லிட்டேன் என கமல் சொல்லும்போது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் போடா என வெகு இயல்பாக உதிர்ப்பதை பார்க்கும்போது பாலச்சந்தரி நினைவுகூரும் நல்லதொரு ஆவணப்படம் நமக்கு கிடைத்த திருப்தியும் ஏற்படுகிறது.
எம்.எஸ்.பாஸ்கருக்கு எப்போதாவது சில அசத்தலான ரோல்கள் கிடைக்கும். இதில் பின்னி பெடலெடுக்கிறார் மனிதர். நடிகையாக வரும் பூஜா குமார் ஒரு நடிகைக்கான வேலையில் துடிப்பு காட்டியுள்ளார்.. கமலுக்கு லிப் கிஸ் கொடுத்து நம்மை அதிரவைக்கும் ஆண்ட்ரியா, கமலின் நோய் அறிந்து அழும் காட்சியில் நெகிழவும் வைக்கிறார்.
பிபி பேஷன்ட்டாக கலாட்டாவும் அழுகாச்சியும் கலந்து மிரட்டும் ஊர்வசியின் ஸ்டைல் கைதட்டல் ரகம்.. கமலின் மாமனாராக வரும் இயக்குனர் விஸ்வநாத் ஒரு தயாரிப்பாளராக மிடுக்கும் கோபமும் காட்டுவது ரசிக்கும்படி இருக்கிறது. கதையோட்டத்தில் அழக்காக சேர்ந்துகொள்ளும் ஜெயராமும் பார்வதியும் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் படம் இறுதிவரை வருவது அவர்களது நடிப்புக்கு கெளரவம் சேர்க்கிறது..
படத்துக்குள்ளேயே எடுக்கப்படும் வரலாற்று படத்தில் நடித்திருக்கும் நாசர் ஒரு காதை பூஜாகுமாரிடம் பறிகொடுத்துவிட்டு, இன்னொரு காதை மட்டும் வைத்துக்கொண்டு பண்ணும் அலம்பல் தனி காமெடி.. கூடவே சண்முகராஜனும் பேராசிரியர் ஞானசம்பந்தமும் உத்தமன் வேடத்தில் இன்னொரு கமலும் சேர்ந்துகொள்ள அந்த எபிசோடே கலகலக்கிறது.
கமலுக்கு ஓபனிங் ஷாங் போடுவதாகட்டும், தெய்யம் ஆட்டக்கலைக்கான பாடலுக்கு இசையமைப்பதாகட்டும் கமலின் தேவையறிந்து இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். சம்தத்தின் ஒளிப்பதிவு இரண்டு காலகட்டத்திலுமே சபாஷ் பெறுகிறது.
முழுவதுமாக கமர்ஷியல் விஷயங்கள் மட்டுமே இருந்தால் அது கமல் படம் இல்லையே.. அதனால் தனக்க்கேற்ற தீனியை திரைக்கதை வடிவில் கமல் முன்கூட்டியே கொடுத்துவிட்டதால், காலமும் இடமும் அறிந்து அதை கமல் ரசிகர்கள் உண்பதற்கு சுவையான பதார்த்தமாக கொடுக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.