வை ராஜா வை – விமர்சனம்

ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் நண்பர்கள் கலாட்டா என வழவழவென அரைமணி நேரம் இழுக்காமல் படம் ஆரம்பித்ததுமே கதைக்குள் நுழைந்துவிடுகிறார் ஐஸ்வர்யா. கவுதம் கார்த்திக்கிடம் சிறுவயதில் இருந்தே மறைந்துள்ள முன்கூட்டியே அறியும் சக்தியால் அவரை வைத்து டேனியல் பாலாஜி நடத்தும் கிரிக்கெட் சூதட்டாத்தில் கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் விவேக்.

பணத்தை இழந்த டேனியல் சும்மா இருப்பாரா..? கோவாவுக்கு ஜாலி டூர் போன கவுதம் கார்த்திக்கை விரட்டி வந்து, கோவாவில் நிற்கும் கப்பல் ஒன்றில் நடக்கும் வித்தியாசமான சூதாட்டத்தில் கலந்துகொண்டு பணத்தை சம்பாதித்து தரும்படி உத்தரவிடுகிறார்.

அதற்கு மறுக்கும் கவுதம் கார்த்திக் முன்னால், எண்ணையில் இருந்து கடத்திவரப்பட்ட அவரது காதலி ப்ரியா ஆனந்தை நிறுத்தி கொலை செய்வதாக மிரட்ட, வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார். இந்த விளையாட்டில் கைதேர்ந்த மனோபாலாவும் அவரது அசிஸ்டென்ட் டாப்சியும் கவுதம் கார்த்திக்கிற்கு கப்பலில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என பயிற்சி தருகின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் டேனியல் நம்பும் விதமாக ஓரளவு பணம் ஜெயிக்கும் கவுதம் கார்த்திக், சூதாட்ட கும்பல் தன்னை கார்னர் பண்ணுவதை அறிந்து, பின்னால் சாமர்த்தியமாக டேனியல் பாலாஜியை அந்த கும்பலிடம் சிக்கவைத்துவிட்டு சம்பாதித்த பணத்துடன் சென்னை திரும்புகிறார்.

கோவாவில் இருந்து டாப்சியின் உதவியுடன் தப்பித்து சென்னை வரும் டேனியல் பாலாஜி, கவுதம் கார்த்திக்கை தனது இடத்துக்கு அள்ளிவந்து, மறுநாள் நடக்க இருக்கும் மேட்சில் பெட்டிங் கட்டி விளையாட சொல்லி மிரட்டுகிறார். கவுதம் கார்த்திக் அதற்கு மறுக்க, இறுதியில் நடந்தது என்ன..? என்பது ட்விஸ்ட்டுடன் கூடிய க்ளைமாக்ஸ்.

முதல் இரண்டு படங்களை விட இதில் கவுதம் கார்த்திக் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.. அந்த அளவுக்கு அவரது கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.. ஒரு பிரபல ஹீரோ கெஸ்ட் ரோலில் வந்தால், என்ன மாதிரி கெத்து காட்டுவாரோ அதைத்தான் கொக்கி குமாராக வந்து சர்ப்ரைஸ் தரும் தனுஷும் பண்ணியிருக்கிறார்.

கதாநாயகியாக ஒப்புக்கு சப்பாணி ரோலில் வழக்கமான அதே நடிப்பில் ப்ரியா ஆனந்த்.. டீ பிரேக்கில் வந்துபோவது போல கொஞ்ச நேரமே வரும் டாப்சி, வில்லன் டேனியலை காப்பாற்றி அனுப்பிவைக்கும்போது தன்னுடைய கேரக்டர் வழக்கமான ஒன்று அல்ல என காட்டியிருக்கிறார்.

விவேக்கின் கேரக்டர் காமெடியுடன், அதேசமயம் சூதாட்ட இடங்களில் எல்லாம் சீரியஸ்நெஸ் காட்டுவது நமக்கு புதுசு.. விவேக்கின் விஸ்வரூபத்தில் சதீஷின் காமெடி குள்ளமாகி போய்விடுகிறது. கறிவேப்பிலை இல்லாமல் சமையல் செய்யமுடியாது என்பதுபோல தவிர்க்கவே முடியாத மனோபாலாவும் தன் பங்கு வேலையை செய்திருக்கிறார்.

உத்தம வில்லனில் மிரட்டிய எம்.எஸ்.பாஸ்கர் இதில் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருவதால் அவரது சத்தம் குறைவுதான். படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதில் யுவனின் பின்னணி இசை நூறு சதவீதம் உழைத்திருக்கிறது.. வேல்ராஜின் ஒளிப்பதிவில் கப்பல் சம்பந்தப்பட்ட காட்சிகள் வாய்பிளக்க வைக்கின்றன.

பெண் இயக்குனர்கள் என்றாலே காதல் கதை, அழுதுவடியும் குடும்பக்கதை, பெண்களை புரட்சிகரமாக காட்டும் பெண்ணிய கதை இவற்றைத்தான் படமாக்குவார்கள் என்கிற மாயவலையில் சிக்காமல் கமர்ஷியல் ஏரியாவில் கதை சொல்லியிருக்கும் ஐஸ்வர்யா தனுஷுக்கு முதலில் பாராட்டுக்களை சொல்லி விடுவோம்..

நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் பவர் மூலம், விளையாட நிறைய ஸ்கோப் இருந்தும் தேவைப்பட்ட இடத்தில் மட்டும் அளவாக பயன்படுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.. கற்பனை தான் என்றாலும் விளையாட்டின் ஒவ்வொரு அசைவையும் கவுதம் கார்த்திக் சரியாக கணிப்பது நம்பும்படியாக இல்லை.. அப்படியானால் சூதாட்டத்திற்கு சமமாக மற்ற விஷயங்களிலும் முன்கூட்டியே நிகழும் நிகழ்வுகளை கணிப்பதாக அதிகம் காட்சிப்படுத்தாது ஏனோ..?

அதேபோல க்ளைமாக்சில் கவுதம் கார்த்திக், டேனியல் பாலாஜி இருவரின் பிரச்சனை முடிவுக்கு வருவதை சரியானபடி முடிக்காமல், தனுஷை உள்ளே நுழைத்திருப்பது ஏதோ க்ளைமாக்ஸை முடித்தோம் என்றுதான் இருக்கிறதே தவிர பரபரவென நகரும் முழுப்படத்திற்கான ஒரு முழுமையான க்ளைமாக்ஸாக இல்லை என்பதும் உண்மை.