கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி
‘உயிர்’ ,’மிருகம்’, ‘சிந்து சமவெளி’ படங்களை இயக்கியவர் சாமி. அந்தப் படங்களின் மூலம் சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்பட்டார். அவர் இப்போது அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து. ‘கங்காரு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். .
இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வைரமுத்து எழுதிய ஐந்து பாடல்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்து சாமி இயக்கியுள்ள ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்..’.
விழாவில் சாமி பேசும் போது ”நான் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு அப்படி அமைந்ததற்கு நான் மட்டுமே காரணமல்ல. நானும் ஒரு காரணம் அவ்வளவுதான். சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது.
ஒரு படம் எந்த மாதிரி வருமென்று டைரக்டர் மட்டும் முடிவு செய்வதில்லை. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். வெற்றி பெற்றால் பங்கு போடுகிறார்கள். தோல்வி அடைந்தால் எங்கள் மீது பழி போடுகிறார்கள். எல்லாப் பழிகளையும் டைரக்டர் தலையில் போட்டுவிடுவார்கள். இது கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. 2008-ல் என்னிடம் சொல்லப்பட்ட கதை.
படமாக எடுக்க 2014 ஆகிவிட்டது. இந்தப் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சம்மதம் சொன்னார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றால் வேறுகதையைத்தான் எடுத்திருப்பேன். இந்தப் படத்தை வேறுமாதிரி இயக்கியுள்ளேன். இது வேறு மாதிரியான படமாக வந்துள்ளது.மனசுல நிற்கிற நல்ல படங்கள் வரிசையில் இதுவும் இருக்கும். பிரபலமான அண்ணன் தங்கை கதைகள் 1961-ல் வந்த ‘பாசமலர்’ 1978-ல் வந்த ‘முள்ளும் மலரும்’ 1993-ல் வந்த ‘கிழக்குச் சீமையிலே’ 1997-ல் ‘பொற்காலம்’ வரிசையில் 2015-ல் வரும் ‘கங்காரு’ படமும் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் எல்லாருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். காடு, முள், கல் என்று நாயகன் அர்ஜுனாவை வெறுங்காலோடு ஓடவைத்தேன். அவரை நான் நிறைய கொடுமைப் படுத்தினேன். எதையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்தார். அனுபவமுள்ள சீனியர் நடிகராக இருந்து தம்பிராமையா கொடுத்த ஒத்துழைப்பும் ஊக்கமும் மறக்க முடியாது.
பாடகர் சீனிவாஸ் அழகான ஐந்துபாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதற்குப் பாடல்கள் எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் பெரிய பலம். பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து போன்று அமைந்துள்ளது. எங்களுக்குப் பிடித்த பாடல்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுவிட்டன. அது மட்டுமல்ல அவரது மனசுக்கு நெருக்கமான ஐந்து பாடல்களில் ‘கங்காரு’ படப் பாடலும் இடம் பிடித்திருக்கிறது. இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்களுக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும். அது ஒன்றுதான் பாக்கி உள்ளது. மற்ற எல்லாப் பெருமைகளும் கிடைத்து விட்டன.
படத்தை என் ஞானத்தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை.2015ல். என் ‘கங்காரு’ வை வெளியிடுகிறார். ” ”இவ்வாறு சாமி பேசினார்
விழாவில் நாயகன் அர்ஜுனா, நாயகி பிரியங்கா, தம்பிராமையா, வெற்றிக் குமரன், இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்,இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,ஆர்.சுந்தர்ராஜன்,வி.சேகர்,கே.எஸ். அதியமான் கேபிள்சங்கர், ஜெகன்,வேல்முருகன், எடிட்டர் மணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு,டி.சிவா, பி.எல். தேனப்பன்,சுரேஷ் காமாட்சி , கரு. நாகராஜன். ராதா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்னம், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். நிறைவாக வந்த நமிதா படக்குழுவினரை வாழ்த்தினார்.