முதலில் ஒரு வட்டிக்கணக்கு பார்த்துவிட்டு விஷயத்துக்கு போவோமா..? வங்கிகளில் ஒரு லட்ச ரூபாய்க்கு வருஷத்துக்கு 7 சதவீதம் வட்டி கிடைப்பதாக கணக்கிட்டால் கூட வருடம் 7000 ரூபாய் கிடைக்கிறது. அப்படியென்றால் 10 லட்ச ரூபாய் என்றால் வருடத்திற்கு 70 ஆயிரம்.. அந்த வட்டிக்கும் வட்டி கிடைப்பது தனிக்கதை..
சரி விஷயத்துக்கு வருவோம்.. விஜய் சேதுபதிக்கு அடுத்த இரண்டு வருடம் வரை கால்ஷீட் டைரி புல்லாகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல வெளிவரும் படங்கள் சில ஓடுகின்றன. சில படுத்துக்கொள்கின்றன. ஆனாலும் விஜய்சேதுபதியின் கால்ஷீட்டுக்காக பலர் அவரைத்தேடி வரத்தான் செய்கிறார்கள்.
அப்படி வருபவர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளும் விஜய்சேதுபதி, அவர்களிடம் தன்னால் இரண்டு வருடங்கள் வரைக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையை சொல்லிவிடுவாராம். அதையும் மீறி நீங்கதான் என் படத்துல நடிக்கிறீங்க என வரும் தயாரிப்பாளரோ அல்லது அவரை அழைத்து வரும் இயக்குனரோ பிடிவாதமாக நின்றால் அவர்தான் என்ன செய்வார்..?
அதனால் வருபவர்கள் சொல்லும் கதைகளின் அடிப்படையில் அவற்றை மூன்றாக பிரித்து, குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ஆளைப்பொறுத்து 25 லட்சம் வரை அட்வான்ஸ் தொகையாக வாங்கிக்கொள்கிறாராம். வந்தவர்களும் நமக்கு எப்படியோ விஜய்சேதுபதியின் கால்ஷீட் கிடைத்ததே என்கிற சந்தோஷத்தில் கிளம்பி விடுகிறார்களாம்.
இந்தப்பணம் அனைத்தும் அப்படியே வங்களின் சேமிப்புக்கணக்கில் போடப்பட்டு விடுமாம். அந்த தொகையில் ஒரு நயா பைசா கூட விஜய்சேதுபதி எடுக்கமாட்டாராம். ஆனால் அதலிருந்து வரும் வட்டியை மட்டும் போனால் போகிறதென்று எடுத்து செலவுக்கு வைத்துக்கொள்வாராம்.
அதேசமயம் யாரையும் அவர் ஏமாற்றவதும் இல்லை. சிலர் வந்து படம் பண்ணவில்லை என்று சொல்லி, தாங்கள் கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டால் கூட அலுங்காமல் குலுங்காமல் எடுத்து கொடுத்தனுப்பி விடுகிறாராம்… இப்போது மேலே சொன்ன வட்டிக்கணக்குப்படி பத்து தயாரிப்பாளர்கள் முன்பணம் கொடுத்துவிட்டு போனார்கள் என்றாலே வட்டி எங்கேயோ போய் நிற்கிறதே.. ஆக மேற்படி வட்டிக்கணக்கால் விஜய்சேதுபதியின் வண்டி சிக்கல் இல்லாமல் ஓடுவதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.