சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்துக்கு பூஜை போட்டாச்சு.. படத்தை தயாரிப்பவர் ஸ்டுடியோ 9 சுரேஷ்.. இவர்தான் இரண்டு வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதியை வைத்து வசந்தகுமாரன் என்கிற படத்தை தயாரிக்க அச்சாரம் போட்டவர். அந்தப்படத்தை ஆனந்த் குமரேசன் என்பவர் இயக்குவதாக இருந்தார்.
ஆனால் இடையில் விஜய்சேதுபதிக்கும் சுரேஷுக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு அந்தப்படம் ஆரம்பிக்கும் முன்னரே நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது.. புதிய படமும் துவங்கப்படுவிட்டது.. ஆனால் கதை வேறு.. இயக்குனரும் வேறு..
ஆனந்த் குமாரசாமியை ஏன் கழட்டி விட்டார்கள்.. அவருக்கே புரியாமல் தான் தனது சந்தேகங்களை கேள்விகளாக்கி விஜய்சேதுபதிக்கும் சுரேஷுக்கும் வீசியிருக்கிறார். அவர் சொல்வதை நீங்களே பாருங்கள்..
“வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் இன்று (14.12..15) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…
1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?
2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?
3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?
4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?
நான் பலமுறைத் தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.
நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே”
என தனது மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்..
சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் பதில் சொல்வார்களா..?