சேனல்களில் விஜய் டிவி கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே வித்தியாசமானது.. அதனால் தான் தன வசம் ரசிகர்களையும் நிறையவே வைத்திருக்கிறது. ஒரு பக்கம் கேம் ஷோக்கள், இன்னொரு பக்கம் டாக் ஷோக்கள், இன்னொரு பக்கம் சீரியல்கள், வரலாற்று தொடர்கள் என பிரமாதப்படுத்தி வருகிறது விஜய் டிவி.
திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களை வைத்து விஜய் அவார்ட்ஸ் கொடுப்பதாகட்டும், வாராவாரம் காபி வித் டிடியில், அப்போது ரிலீசாகும் புதிய படங்களின் ஸ்டார்களை வைத்து ஷோ நடத்துவதாகட்டும் எல்லாமே மெகா பிளான் தான். அவ்வளவு ஏன் புதிய படங்களை வாங்குவதில் கூட போட்டிபோட்டு சாதிக்கிறதே.
ஆனால் விஜய் டிவியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, அதில் எந்த ஒரு படத்தின் கிளிப்பிங்சையும், பட விழாக்களையும், படம் சம்பந்தப்பட்ட செய்திகளையும் ஒளிபரப்புவது இல்லை என்பது தெளிவாகத்தெரியும். சொல்லப்போனால் திரையுலக விழாக்கள் எதற்குமே விஜய் டிவி செய்தி டீமும் வருவதாக தெரியவில்லை.
ஆனால் படத்தை ஒளிபரப்புவது, நடிகர்களை அழைத்து ஷோ நடத்துவது என சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் தான் பணத்தையும் புகழையும் அள்ளி வருகிறது. இதனால் எங்களை வைத்து பணம் சம்பாதிக்கலாம், ஆனால் எங்கள் படங்களை புரமோட் பண்ணி எங்களது வியாபாரத்திற்கு மட்டும் உதவக்கூடாதா..? என படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தரப்பு கொதித்து போயுள்ளதாக தெரிகிறது..
இது என்ன நியாயம் என்றும் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. விரைவில் இது திரையுலகில் உள்ள மற்ற சங்கத்தினரின் ஒத்துழைப்பையும் பெற்று பிரபலங்கள் இனி விஜய் டிவியை புறக்கணிக்க செய்யும் விதமான முடிவை எடுக்கப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.. சுதாரித்துக்கொள்ளுமா விஜய் டிவி..?