தியேட்டர்காரர்கள் முன்னிலையிலேயே அவர்கள் அடாவடியை வெளுத்து வாங்கிய விஷால்..!


தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றுகூடி ஏதாவது ஒரு முடிவெடுத்தால் அதற்கு தியேட்டர்காரர்கள் தரப்பில் இருந்து எந்த ஒத்துழைப்பும் தரப்படுவது இல்லை. அதேசமயம் தியேட்டர்காரர்களோ தாங்களாகவே சில முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதோடு அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்து பேசுவது கூட இல்லை..

கடந்த மே மாதம் விஷால் முன்கூட்டியே அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை, தியேட்டர்காரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் சில நாட்களிலேயே வாபஸ் வாங்க வேண்டி வந்ததும், சில நாட்களுக்கு முன் தியேட்டர்காரர்கள் திடீரென நடத்திய தங்கள் போராட்டத்தை தயாரிப்பளார் சங்கத்தை மதிக்காமல் நடத்தியதும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

இந்த நிலையில் தியேட்டர் கட்டணம் மீண்டும் தியேட்டர்காரர்களின் விருப்பப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இன்று நடைபெற்ற ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஷால், தியேட்டர்காரர்களை மேடையில் வைத்துக்கொண்டே அவர்களின் செயலை கடுமையாக விமர்சித்தார்..

“மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்டப்படுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்.. தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வழிவகை செய்யவேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்” என்று பேசினார் விஷால்.