‘அறம்’ படத்தின் மூலம் திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் கோபி நயினார். நயன்தாரவை வைத்து ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.
பின்னர் அப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார் என்றும், அதன்பிறகு ஆர்யா நடிக்கிறார் என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. இறுதியாக கோபி நயினார் படத்தின் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் என்றும், இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும் இப்போது தகவல் வெளியாகியனது..
ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருந்தநிலையில் என்ன காரணத்தினாலோ ஆரம்பமாகவில்லை. பெப்சி தொழிலாளர்கள் பணிபுரியவில்லை என்று தகவல் அடிபடுகிறது. விசாரித்ததில் கத்தி, துப்பாக்கி பட இயக்குனர், அறம் பட இயக்குனரின் படத்தை மேற்கொண்டு நகரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கத்தி படத்தின் கதை தன்னுடையதுதான் என கோபி நயினார் வழக்கு தொடர்ந்தது ஞாபகம் இருக்கலாம்.
ஏற்கனவே கத்தி இயக்குனருக்கும் நயன்தாராவுக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாகத்தான் கோபி நயினாருக்கு ஆதரவு கொடுத்து அவர் திறமை மீது நம்பிக்கை வைத்து ‘அறம்’ பட வாய்ப்பை கொடுத்தார் நயன்தாரா. அப்போது கத்தி இயக்குனரால் ஒன்றும் செய்ய இயலவில்லை..
ஆனால் தற்போது அறம் இயக்குனர் படங்களை ஒப்பந்தமான சித்தார்த், ஜி.வி.பி.பிரகாஷ், ஆர்யா போன்றவர்களின் மனதை கலைத்து அந்தப்படத்தில் இருந்து விலகவைத்தாராம் கத்தி இயக்குனர்.
அதேசமயம் அடுத்து ஜெய் ஒப்பந்தமாக, அதை ஏனோ கத்தி இயக்குனரால் தடுத்து நிறுத்த முடியவில்லையாம். அதனால் பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் இந்த விஷயத்தை காதில் போட்டாராம் கத்தி இயக்குனர். அவரும் பெப்சி யூனியனுக்கு படம் ஆரம்பிப்பதாக லெட்டர் கொடுக்கவில்லை என காரணம் காட்டி ஆட்களை அனுப்பாமல் செய்து படப்பிடிப்பு துவங்க முடியாமல் செய்து விட்டாராம். என்னதான் கத்தி, துப்பாக்கி என காட்டி சர்கார் மிரட்டினாலும், ஒருகட்டத்தில் அறம் வென்றுதானே தீரும்.