நீண்டநாள் கழித்து மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந் அந்தப்படத்தில் கதாநாயகியாக நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் நடித்திருந்தார். இயக்குனர் சுதா கொங்கரா இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
சில நாட்களுக்கு முன் இந்தப்படத்தை பற்றி திடீரென சலசலப்பு எழுந்தது.. காரணம் இந்தப்படத்தின் கதை குத்துச்சண்டை வீராங்கனையான துளசி என்பவர் பற்றிய கதை என்றும், அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த துளசி கூட படத்தை பார்த்துவிட்டு அப்படித்தான் இருக்கிறது என்றும் சொன்னாராம்.
இதனால் சுதா கொங்கரா இந்தப்படத்தின் கதைய கிட்டத்தட்ட காப்பியடித்து விட்டார் அல்லது சம்பந்தப்பட்டவரின் அனுமதியில்லாமல் எடுத்துவிட்டார் என்று கூட சலசலப்புகள் எழுந்தன. அதேசமயம், அடிமட்டத்தில் இருந்து முன்னுக்குவர துடிக்கும் அல்லது முன்னுக்கு வந்து வெற்றிக்கொடி கட்டிய பல குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையில் இதே மாதிரியான நிகழ்வுகள் இருப்பது சகஜம், அதைத்தான் பொதுவாக படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுதா என அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.