பொதுவாக ஒவ்வொரு வாரமும் வெளிக்கிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். பண்டிகை தின ரிலீஸ் என்றால் மட்டும் முன்கூட்டியே அதாவது புதன், வியாழக்கிழமைகளில் கூட படம் ரிலீசாவதும் உண்டு. ஆனால் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் மட்டும் பண்டிகை எதுவும் இல்லாத சூழலில் வியாழக்கிழமை வெளியாவது ஏன் என திரையுலகை சேர்ந்த பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
இந்தப்படத்தின் தயாரிப்பாளார் வேந்தர் மூவீஸ் என்றாலும் அதன் பின்னணியில் இருந்து படத்தை தயாரிக்கும் டிசிவா, தயாரிப்பாளர் சங்க செகரெட்டரி என்பதால் தனது படத்தை ஒருநாள் முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் விதமாக சலுகை எடுத்துக்கொள்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலேயே சிலர் பேசிக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
தற்போது பிரதமர் மோடியின் உத்தரவால் ரூபாய் நோட்டு புழக்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை முன்னிட்டு இந்தப்படத்தின் ரிலீஸ் அடுத்தவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அப்போது கூட வியாழக்கிழமை (நவ-17) அன்றே ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்… அதாவது ஒருநாள் முன்கூட்டியே கலெக்சனை மொத்தமாக அள்ளவேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.
இப்படியே மற்ற தயாரிப்பாளர்களும் போர்க்கொடி தூக்கினால் தயாரிப்பாளர் சங்கம் ஒப்புக்கொள்ளுமா..?