தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா, சரத்குமார், தங்கமீன்கள் ராம், மகிழ்திருமேனி, கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, யுடிவி தனஞ்செயன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அவர்களை மேடைக்கு அழைத்தவர்கள் யுடிவி தனஞ்செயனை மேடைக்கு அழைக்க மறந்துவிட்டார்கள். அதற்குள் முதல் பேச்சாளர் தனது பேச்சை ஆரம்பித்துவிட, உடனே கீழே அமர்ந்திருந்த தனஞ்செயன், கூப்பிட்டு வைத்து இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே, நாம் எந்தவிதத்தில் குறைந்துபோய் விட்டோம் என நினைத்தாரோ என்னவோ, விடுவிடுவென அரங்கை விட்டு வெளியேறினார்.
இதை கவனித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் அவரை சைகையாலேயே போகவேண்டாம் என சொன்னார். ஆனாலும் தனஞ்செயன் நிற்கவில்லை. உடனே தொகுப்பாளர் மைக்கில் தனஞ்செயனை மேடைக்கு வருமாறு அழைக்க, அதற்குள் மேடையை விட்டிறங்கிய ஜே.எஸ்.கே வேகமாக சென்று, வெளியேறிக்கொண்டிருந்த தனஞ்செயனை விடாப்படியாக அழைத்து வந்து அமரவைத்தார்.
ஆனாலும் தனஞ்செயன் விழா முடியும் வரை பட்டும் படாமலேயே உர்ரென்றே அமர்ந்திருந்தார். தயாரிப்பாளர் கிறிஸ்டி கொடுத்த பூங்கொத்தை கூட ஏற்க மறுத்துவிட்டார். பின்னே இப்போது வந்த லட்சுமி ராமகிருஷ்ணனை எல்லாம் மேடையேற்றிவிட்டு, திரையுலகில் முக்கியமான புள்ளியாக விளங்கும் தன் பெயரை அழைக்காமல் விட்டால் அவருக்கு கோபம் வருவது இயல்புதானே..
மேடையில் உட்கார வைத்தாலும் நேர பற்றாக்குறையால் அவருக்கு பேசும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது இன்னொரு பரிதாபம்.. விழாவுக்கு அழைத்தவர்கள் தொகுப்பாளரிடம் யார் யார் முக்கியமானவர்கள், யாரை மேடைக்கு அழைக்கவேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக சொல்லியிருந்தால் இப்படிப்பட்ட குழப்பம் நேர்ந்திருக்காது இல்லையா..?