ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் “1021”
பெற்ற தாயின் மறைவுக்குப் பின்னர், தந்தையுடன் வாழ்ந்து வரும் சுகித்ரா எனும் இளம் பெண், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தன் தந்தையுடன் ஒரே வீட்டில், பெரியோர்களின் வழிநடத்தல் இல்லாமல், துயரத்தின் இருளில் தனது நாட்களை தள்ளுகிறாள். அவள் அன்றாட வாழ்க்கையில் தன் தந்தையாலும், சமூகத்தாலும், தன்னை காதலித்தவனாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பல திருப்புமுனைகளுடன் சொல்லும் இந்த படத்தை RDG Film Internation PTE Ltd சார்பாக தினகரன், தி.நகுலன், அ.கோபு ஆகிய மூவரும் தயாரிக்க, ஜேம்ஸ் குமார் கதாநாயகனாகவும், ஹேமாலினி கதாநாயகியாகவும், தி. நகுலன், அ.கோபு மற்றும் சில சிங்கப்பூர் நடிகர்களும் நடிகைகளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டான் அரவிந்த் ஒளிப்பதிவு செய்து இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் படத்தொகுப்பினை விக்னேஷ் சரவணன் செய்கிறார். விரைவில் திரைக்கு வரப்போகும் இந்தப் படம் சென்னை, பாண்டிச்சேரி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது.