நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறேன்: நடிகர் யுகேந்திரன்!

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் யுகேந்திரன். சைலண்ட் வில்லனாக நடித்து அப்படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றார். அதன்பிறகு பல படங்களில் நல்லது, கெட்டது என அனைத்தும் கற்றுக் கொண்ட யுகேந்திரன். தற்போது நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்…

பிறப்பிலேயே சினிமா வரம் பெற்று வந்த நான் எனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்க நினைத்தேன். பல நெகட்டிவ் கதாபாத்திரல் நடித்து ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக் கொண்டேன். ஆனால் சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது, அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தமிழ் நாட்டிலும் எனது குடும்பம் சிங்கப்பூரிலும் என இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது. அடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க சிங்கப்பூர் சென்றுவிடுவதாகவும் இதனால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் பொய். நான் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக மட்டுமே சிங்கப்பூரில் தங்க நேர்ந்தது. 2013ம் ஆண்டு ”விழா” என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்து படத்தில் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை. படத்தை முடித்து கொடுத்தபின்தான் சென்றேன்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டேன், அதற்கும் சிலர் இனி யுகேந்திரன் இந்தியா வரமாட்டாராம் என்றெல்லம் கதை கட்டிவிட்டுள்ளார்கள். இதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன். இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று நடிகர் யுகேந்திரன் கூறினார்