வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே , சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.இப்போதும் கூட வெண்ணிலா கபடி குழு மேடையில் நிறப்பது போல் உள்ளது. இந்த வில் அம்பு படம் எங்கள் பதினாலு வருட நட்பின் சாட்சி என்றார் இயக்குநர் சுசீந்திரன்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது, இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு, தற்போது சுசீந்திரன் ஆலமரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். அவர் நட்புக்கு செய்யும் செயல் மிகப்பெரியது. ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாக காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்ட தக்க ஒரு விஷயம். எனக்கு அழுக்கை அழகாக காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது. இந்த படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் என்றார்.
நடிகர் சூரி பேசும் போது, நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டும் அல்ல விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள் தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள “வில் அம்பு” படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகபெரிய வெற்றியாகும் என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது, படத்தில் நான் எழுதிய பாடல் குறும்படமே உயிர்க்கிறாய். இந்த பாடலின் நடக்கும் சூழலை இயக்குநர் ரமேஷ் சொல்லும் போது, இது குறும்படம் எடுக்கும் நாயகன் பாடும் பாடலாக அமைய வேண்டும் என்று கேட்டார். உடனேயே இந்த பாடல் குறும்படமும் அதை சார்ந்த விஷயமும் இருக்கும் வகையில் உருவாக்கினேன் பாடல் நன்றாக வந்துள்ளது என்றார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும் போது, இங்கே மேடையில் எங்களை வில் போன்ற வடிவில் மிகவும் க்ரியேடிவாக அமரவைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் நந்தா குமார் வெற்றி பெற வேண்டும் என்றார்.
படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீனின் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருப்பார் என்பதை கூறிவிட்டு. இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, சுசீந்திரன் தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குநர் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய் தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போது தான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும் என்றார்.