நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி


‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.

இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள். இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.