கட்டைக்கூத்து கலைஞனாக கவிஞர் சினேகன் நடிக்கும் ‘பொம்மி வீரன்’!

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மிவீரன் என்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பொம்மிவீரன் என்ற படத்தில் இவர் ஒரு கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கிறார்.

இதற்காக இவர் கட்டைக்கூத்து கலைஞர்களை நேரில் சந்தித்து பிரத்தேகமாக பயிற்சியும் எடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வு முறைகளை அறிய அவர்களோடு பழகி தன்னை ஒரு முழுமையான கட்டைக்கூத்து கலைஞனாகவே மாற்றி இருக்கிறார். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலோடு இப்படத்தின் கதை வேறு ஒரு வித்தியாசமான தளத்தில் பயணிக்கிறது.

இப்படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை சேகரித்து அதை புத்தகமாக பதிவு செய்து அதனை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார் தாஜ்நூர் இசை அமைக்கிறார் சாலைசகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் பாக்யராஜ், ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், சந்தானபாரதி, டி.பி.கஜேந்திரன், முத்துக்காளை அறிமுக கதாநாயகி நாட்டியா, ஆனந்தி, கன்னிகா என ஏராளமான நட்சத்திர பட்டளாமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல லட்ச ரூபா செலவில் மதுரை பாரம்பரியத்தோடு தத்ரூபமாக ஒரு காலனியை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.