தமிழகத்தில் அந்தக் கால கே.வி, மகாதேவன் , தொடங்கி எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இந்தக் கால அனிருத் வரை 250 இசையமைப்பாளர்களிடம் இசைக்கருவி வாசிப்பவராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் ‘செல்லோ’ செல்வராஜ் . வயலின் முதல் “செல்லோ ” இசைக்கருவி வரை 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் இவர். தமிழை தாண்டி தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,பெங்காளி ஹிந்தி திரைத்துறைகளுக்கும் பங்காற்றியவர். அதனால் எல்லா இசையமைப் பாளர்களிடமும் மோஸ்ட்வாண்டட் இசைக் கலைஞர் .
மதுரையை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தையும் பல இசையமைப்பாளர்களுக்கு வயலின் வாசித்தவர். சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்ட செல்வராஜ் இடையில் ஒருதிசை மாற்றமாக திரைப்படங்களில் நடித்தார். கவிஞர் வாலி இயக்கத்தில் வடமாலை திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான செல்வராஜ் ,நாயகனாக 20 படங்களில்நடித்துள்ளார். அவரது திரைத்தோற்றத்துக்கு கமலஹாசன் பிண்னனி பாடகராக பாடிய நிகழ்வும் உண்டு. ராஜரிஷி படத்தில் சிவாஜியுடன் நடித்திருக்கிறார். லங்கேஸ்வரன் படத்தில்இந்திரஜித்தாக நடித்துள்ளார். இயக்குனர் கே.விஸ்வநாத்தின் தேசிய அங்கீகாரம் பெற்ற தெலுங்கு திரைப்படமான சாகர சங்கமம் எனும் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றியிருக்கிறார்.இசைஞானி இளையராஜாவுடன் உலகம் முழுக்க கச்சேரிகளில் வாசித்த அனுபவமும் இவருக்கு உண்டு.
சினி மியூசிக் யூனியனில் ஜாயிண்ட் செக்ரட்டரியாக இருக்கும் பல்வேறுபட்ட அனுபவம் கொண்ட செல்வராஜ் செல்லோ இசைக்கருவி வாசிப்பதில் தனித்திறமை பெற்றதால்’செல்லோ’ செல்வராஜ் என்று பெயர் பெற்றார்.
திரைப்படத்துறையை தாண்டி ஆல் இந்தியா ரேடியோவில்(AIR) கம்போசராகவும், லால்குடி ஜெயராமன்,விவி ரவி,ராமானுஜம் , எல்.சுப்ரமணியம் ஆகிய இசை ஆளுமைகளுக்கு செல்லோ இசைக்கலைஞராகவும் பணிபுரிந்திருக்கிறார். மேற்கத்திய இசைக்கருவிகளை மேண்டலின் ஸினிவாசோடு திருவையாறு கச்சேரிகளில் பங்குபெறச்செய்த இவரது பங்கு அளப்பரியது.
மேற்கத்திய செவ்வியல் இசை நடத்துனர்(western Classical Conductor) ஹேண்டல் மேனுவலின் கீழ் பல்வேறு மேற்கத்திய இசை நிகச்சிகளில் பாங்காற்றினார்
30வருடங்களாக திரைப்படத்துறையையும் தாண்டி, தன்னுடைய இசை ஆளுமையை செலுத்திக்கொண்டிருந்த திரு.செல்லோ செல்வராஜை வைத்து புதுமையான இசைக்கச்சேரிநடத்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த தமிழர் நல்லூர் டிராவல்ஸ் பாபு திட்டமிட்டார். ஸ்பெயினில் தமிழிசையை நிகழ்த்திக்காட்ட விரும்ப ,அதன்படி சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ்தரைவழியாக செல்லும் ஸ்பெயின் சுற்றுலா பேருந்துப் பயணத்தில் பயணிகளோடு கச்சேரி செய்வது என்பது திட்டம். குறிப்பிட்ட இடம் சேர்ந்த பின் அங்குள்ள பொது அரங்குகள்கபற்கரை , மைதானம் என்று இந்திய இசையை வாசித்து காற்றில் கலக்கச் செய்த போது நாடு , மொழி , பூகோள எல்லை கடந்து மக்கள் நின்று கவனித்து ரசித்துப் பாராட்டிச்சென்றுள்ளனர். இப்படி 21 நாட்கள் பேருந்தில் தமிழிசை மற்றும் இந்திய இசை மழையைப் பொழியச் செய்து விட்டு தாயகம் திரும்பியிருக்கிறார் செல்வராஜ்.
அதன்படி மூன்று வாரங்கள் வெவ்வேறு தருணங்களில் பல்வேறு கருவிகளுடன் இசைக்கச்சேரி நடத்தினார் செல்வராஜ். பயணிகள் அனைவரும் தமிழர்கள் . அவர்கள்பயணத்தில் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நனைந்து மகிழ்ந்து உருகினர். இடையிடையே நேயர் விருப்பமாகப் பயணிகள் கேட்ட பாடல்களையும் வாசித்திருக்கிறார் இவர்.
பிரான்ஸ் சென்று சேர்ந்த பின்னும் தமிழிசையை பரப்பியிருக்கிறார் செல்வராஜ். பிரான்சில் ஒரு இசைக்குழுவுடன் இணைந்து 2 மணிநேர இசைநிகழ்வு தன் வாழ்வில் மறக்கமுடியாதது. ஸ்பெயினில் ரம்லா டி மால் எனும் மில்லியன் மக்கள் வந்து செல்லும் இடத்தில் சிலி மற்றும் ஹாலந்து ஒவியர்களின் ஒவியங்களை கெளரவிக்கும் பொருட்டு, சக கலைஞர்களை தனது வயலினால் கெளரவப்படுத்தியிருக்கிறார்.
அதேபோன்று சுற்றுலா உலகில் புகழ்பெற்ற ஸ்பெயின் ரோசஸ் பீச்சில் அவ்வப்போது நிகழ்த்திய சோலோ இசை நிகழ்வு தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக கூறுகிறார். ரோசஸ் பீச் எப்போதுமே இசை தனக்கு உள்ளாக வைத்துக்கொண்டு ஒரு ரிதத்துடன் செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆங்காங்கே இசைத்துணுக்குகள் நம்மை கடந்து சென்றவாறேயிருக்க, வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்கள் இசை எங்கிருந்து வந்தாலும் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர். தான் இசைத்தபோது எதிரில் அவர்கள் ஆடிய அவர்கள் நாட்டு நடனங்கள் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது எனக்கூறுகிறார்.
மேலும் இந்த தனி இசைப் பயணம் பற்றி செல்லோ செல்வராஜ் கூறும்போது .” நான் 30 ஆண்டுகளாக பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு 1000க்கு மேற்பட்ட படங்களுக்கு இசைக்கருவிகள் வாசித்திருக்கிறேன். கச்சேரிகளுக்கு உலகம் சுற்றியிருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமான கணக்கற்ற அனுபவம். சுவிட்சர்லாந்து தமிழ் மக்கள் தமிழ் இசையில் , இந்தியஇசையில் காட்டும் ஆர்வம் அளவிட முடியாதது. கச்சேரியை விட தனிப்பட்டவர்களோடு உரையாடி அவர்களின் ரசனையோடு அவர்கள் கொடுத்த ஊக்கம் மறக்க முடியாதது. சுவிஸ் மக்களின் உபசரிப்பு நம் தமிழிசைக்கு செய்த மரியாதையாகவே நினைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகின் பல நாடுகளிலிருந்தும் இப்படிப்பட்ட கச்சேரி செய்ய அழைப்புகள் வந்துள்ளன. ஸ்விஸ் நல்லூர் டிராவல்ஸ் பாபு இல்லைஎன்றால் ஐரோப்பிய தமிழிசை அனுபவத்தை என்னால் அனுபவித்திருக்க முடியாது.” என்கிறார் உற்சாகத்துடன் . நல்ல இசை பூர்த்தியாவது நல்ல ரசனைத்தன்மையில்தானே..