இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான ‘போடா’ பாடலை பூட்டானில் வெளியிட்டனர். இந்த பாடலை ஆர்.ஜெ பாலாஜி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தங்களின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக மியன்மாரை நோக்கி பயணிக்கும் போது அவர்கள் மலைச்சரிவு, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்களையும், மறியல் போன்ற தடங்கள்களையும் மேற்கொள்ள வேண்டியதாக ஆயிற்று. எனவே அவர்களால் மியன்மார் எல்லையை கடக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் அந்த எல்லையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு பூகம்பமானது அதிக ரிக்டர் அளவில் தாய்லாந்தை நோக்கி வர இருக்கிறது என்கின்ற தகவல்களை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டதும், அவர்கள் சென்னை 2 சிங்கப்பூர் திட்டத்தை கைவிட முடிவு செய்துவிட்டனர். அனைவரின் பாதுகாப்பையும் கருதி ஜிப்ரானும் அவருடைய குழுவினரும் இந்த வருத்தமான முடிவை எடுத்தனர். அவர்கள் நல்ல முறையில் சென்னை திரும்புவதற்காக பலரும் தங்களின் ஆதரவையும், பிரார்த்தனைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நடுவே, தங்கள் குடும்பங்களிடம் இருந்தும், அன்பிற்குரியவர்களிடம் இருந்தும் கிடைத்த ஆதரவு அவர்களுக்கு மேலும் பலத்தை கொடுத்தது மட்டுமில்லாமல் தங்களின் பயணத்தை மேற்கொண்டு தொடருமாறு செய்திருக்கிறது.
அனைவரின் பாதுகாப்பையும் நன்கு ஆராய்ந்த பின்னர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும் தங்களின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை தொடர முடிவு செய்துவிட்டனர். இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, மாற்று வழி பாதையை இந்த குழுவினர் தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதையானது சற்று தூரமாக இருந்தாலும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் மன உறுதியோடு ஜிப்ரானும், அவருடைய குழுவினரும் செயல்பட்டு வருகிறர்கள் என்பதை உறுதியாவே சொல்லலாம். ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணம் தற்போது மீண்டும் தொடங்கிவிட்டது…தங்கள் படத்தின் மற்ற பாடல்களை ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிட சிங்கப்பூரை நோக்கி பயணத்தை தொடர்கின்றனர் ஜிப்ரானும், அவருடைய குழுவினரும்.
தற்போது மியன்மாரை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இந்த குழுவினர், தங்கள் படத்தின் மூன்றாவது பாடலை அங்கு வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.
இவர்களின் அடுத்த இலக்கு ‘தாய்லாந்து’..