யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான ‘நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு’ என்ற திரைப்பட பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘யாக்கை’ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் முத்து குமரன் தயாரித்து வருகிறார். முன்னதாக, இந்த படக்குழுவினர் யூடூபில் வெளியிட்ட ‘நீ எந்தன்’ என்னும் பாடல் காட்டு தீ போல் மக்களிடையே பரவி கொண்டிருக்கின்ற இந்த நிலையில், தற்போது தனுஷும், யுவனும் ஜோடி சேர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் ஓயாத கடல் அலைகள் போல் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை தனுஷின் குரலில் பிறந்த அனைத்து பாடல்களுமே மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவையாகும், அதே போல் இந்த பாடலின் தாக்கமும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“காதலியின் அன்பு வார்த்தைகளுக்காக ஏங்கி கிடக்கும் காதலன், ஒரு கட்டத்தில் அவள் மீது கோபம் கொண்டு பாடுவதே இந்த ‘சொல்லி தொலையேம்மா” பாடலின் கரு. இந்த பாடலுக்கு ஏற்ற குரலை தேர்வு செய்யும் யோசனையில் இருந்த போது, தனுஷின் குரல் மட்டும் தான் இந்த பாடலுக்கு ஏற்ற குரல் எனவே அவர் தான் இந்த படாலை பாட வேண்டும் என்று இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறினார். கண்டிப்பாக இவர்களின் இந்த கூட்டு முயற்சி பெரும் வெற்றியை தேடி தரும் என்று நம்புகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்.