விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17 வெளியீடு!

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எலக்சன்’ தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.