நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு:
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மேதினவிழா கொண்டாடப் பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இது நடந்த்து.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு .பேசினார்.அவர் பேசும் போது,
”இங்கே குழுமியிருக்கும் பெப்ஸி குடும்பத்தினரே, இங்கே மத்திய அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் இக்கட்டான நேரத்தில் கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள் . இது இக்கட்டான நேரமாக இருக்கலாம். ஆனால் வைக்கப்பட்ட வை நியாயமான கோரிக்கைகள்தான். இப்போது வைக்கப்பட்ட து, சாதகமான அரசியல் சூழல் என்பதால் அல்ல. இவை பலநாள் காத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். இந்த நேரத்தில் வைப்பது அமைச்சர் இங்கு வந்திருப்பதால் மட்டுமே.. அமைச்சர் அவர்களே நீங்கள் இந்தக் கோரிக்கைகளை என்று வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும். தயவு செய்து நிறைவேற்ற செய்யுங்கள். இத்துடன் இன்னொரு கோரிக்கையையும் சேர்த்து வைக்கிறேன். அறிவுசார் சொத்துரிமையான ‘இண்டலக்சுவல் பிராபர்டி ரைட்ஸை ‘ப் பதிவு செய்ய டில்லி வரை நாங்கள் போக வேண்டியிருக்கிறது.
இங்கேயும் இண்டலக்சுவல் இருக்கிறார்கள்.இங்கேயும் இண்டலக்சுவல் பிராபர்டி இருக்கிறது. அதற்கு இங்கேயே தனியாக ஒரு அலுவலகம் இருக்க வேண்டும். இதை என் கோரிக்கையாக அல்ல உரிமைக்குரலாக சொல்கிறேன்.
தொழிலாளர்களுக்கான தொழில்நுட்ப திறன் பயிற்சித்திட்டத்தை துரிதப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது . நான் இங்கே வந்திருபபது எனக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்களால் அல்ல. என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது என்னுள் இருக்கும் தொழிலாளி உழைப்பாளி என்பதுதான். நானும் ஒரு தொழிலாளிதான்.-கமல்ஹாசன் என்கிற நட்சத்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசன் என்கிற தொழிலாளி மட்டும்தான். அதன்மூலம்தான் என் நிறுவனமே இயங்கி வருகிறது.
நிமாய் கோஷ் பற்றி இங்கே அடிக்கடிப் பேசப்பட்டது.மகிழ்ச்சி. தேசிய தீதம் வேறு மாகாணத்திலிருந்து வந்தது போல் நிமாய் கோஷ் தமிழில்கூட பேசத் தெரியாதவராக இருந்தாலும் வேறு மாகாணத்திலிருந்து இங்கே வந்து தொழிலாளர்களுக்காக உழைத்தவர். அவரைப் போல எம்.பி. சீனிவாசனையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்
அவர்கள் எல்லாம் ஊக்குவித்த குருதிதான் இன்றும் எனக்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது. உங்களில் என்னையும் ஒருவனாக பார்த்துக் கொண்டிருக்கீறீர்கள் அதற்கு என் நன்றி .
இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும் இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள். நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ எனவிஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள். ”இவ்வாறு கமல்ஹாசன் விஷாலைப் பாராட்டிப் பேசினார்.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா பேசும் போது ” உங்கள் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றவே டில்லியிலிருந்து நான் வந்திருக்கிறேன். அமைப்பு ரீதியாக இந்தியாவில்7 கோடிதொழிலாளர்கள் இருக்கிறார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் 40 கோடி பேர் இருக்கிறார்கள் .அவர்களை எல்லாம் முறைப்படுத்தி உதவி செய்ய முயன்று வருகிறோம்.
பெப்ஸியில் 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் . அவர்களை நம்பி குடும்பத்தினர் 2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இதை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். இது தேர்தல் காலம் என்பதைக்கூறி என்னை ஒரு சங்கடத் திலிருந்து கமல் காப்பாற்றி விட்டார். இந்த தேர்தல் காலத்தில் இப்போது என்னால் எதையும் உறுதிமொழியாகத் தரமுடியாது.
தேர்தல் முடிந்ததும் நானே நேரில் வந்து கல்வி, மருத்துவம், வீடு போன்ற உதவிகளை நிறைவேற்றுவேன்.” என்றார் .
முன்னதாக கோரிக்கைகளை விளக்கி ஜி.சிவா தலைமையுரையாற்றினார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.கே. செல்வமணி, பேசும்போது அமைச்சரிடம் கோரிக்கைகளை தெலுங்கில் பேசி விளக்கினார். வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் ‘பெப்ஸி’ குடும்ப மாணவர்களுக்கு 35 இடங்கள் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் இலவசமாகத் தருவதாக அறிவித்தார்.
விழாவில் நிமாய் கோஷ் விருதுகள் வழங்கப் பட்டன.. இவை 23 சங்க ங்களிலிருந்து தலா ஒருவர் எனத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதும் பரிசுத் தொகையும் வழங்கப் பட்டன.
இவ்விழாவில் பெப்ஸி குடும்பத்தினருக்கு நல நிதியும் வழங்கப் பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் விஷால்”நடிகர் சங்கம்என்றும் பெப்ஸிக்கு துணைநிற்கும்” என்று உறுதி கூறினார். மேலும் நடிகர் விஜயகுமார், தமிழக பா,ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு ,இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
‘பெப்ஸி’ பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன் நன்றி கூறினார் .’பெப்ஸி’ செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் விழாவைத் தொகுத்து வழங்கினார்