பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’.. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார்.. மற்றும் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தர மூர்த்தி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், கே பிலிம்ஸ் நிறுவனர் சேரன் மற்றும் ராஜராஜன், நடிகர் ஆரி, ‘பட்டதாரி’ புகழ் அபி சரவணன், ‘அசத்தப்போவது யாரு’ இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா..? அதில் உயிர்நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அபிசரவணன் டில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த விவசாயிகளுடன் சில நாட்கள் கலந்துகொண்டு, அந்த நட்பின், உணர்வின் காரணமாக மரணமடைந்த இந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்திற்கு இந்த நிதி உதவி கிடைக்க இந்த ‘கிரகணம்’ படக்குழுவினர் மூலமாக வழிவகை செய்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய அபி சரவணனும் ஆரியும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். பொதுவாகவே சமூக நிகழ்வுகளில் மக்கள் தரப்பில் இருந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் ஆரி.. இந்த விழாவில் அவர் பேசும்போது, விவசாயிகளை காப்பாற்றுவதை விட விவசாயத்தை காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.. விவசாயத்தை காப்பாற்றினால், விவசாயிகள் தங்களை தாங்களே பார்த்துக்கொள்வார்கள்.. வரும் நாட்களில் தண்ணீரின் தேவை அதிகரித்து தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கப்போகிறது.. விவசாயிகளுக்கு நாம் உதவ வேண்டும் என்றால் தண்ணீரை இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பிக்கவேண்டும்” என எச்சரிக்கை திரி கொளுத்தி விட்டு சென்றார் ஆரி..
ஆரியும் கிருஷ்ணாவும் மிக நெருங்கிய நண்பர்கள்.. ஆனால் கிருஷ்ணாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அங்கே இங்கே என டென்சனுடன் அலைந்த கிருஷ்ணாவால் ஆரியை விழாவுக்கு அழைக்க முடியவில்லை.. இருந்தாலும் நண்பனுக்காகவும், விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த விழாவில் நிதியுதவி வழங்கப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டதாலும் தானே விரும்பி வந்ததாக கூற, கண்களாலேயே ஆரியிடம் மன்னிப்பு கேட்டார் கிருஷ்ணா.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவா பேசும்போது, “ஒரு படத்தில் பணியாற்றும் நட்சத்திரங்கள் அனைவரும் படப்படிப்பு முடிவடைந்தவுடன் தங்களது பணி முடிவடைந்து விட்டது என ஒதுங்கிக்கொள்ளாமல், அந்தப்படம் ரிலீசாகும் நாள் வரை, மறுக்காமல் தங்கள் ஒத்துழைப்பை அந்தப்படத்திற்கு கொடுக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
படத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும்போது, “இந்தப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் இளன் தான். இளனை நான் சந்திக்கும்போது அவருக்கு 21 வயது. இந்தப்படத்தின் கதையை வெறும் இருபது நிமிடம் மட்டுமே இயக்குனர் இளன் என்னிடம் சொன்னார்.. படத்தில் நான் அணியும் ஆடைகளை கூட எனக்கு பிடித்த மாதிரி என் சொந்த ஆடைகளையே அணிய சொல்லிவிட்டார்” என்றார்.
இன்னொரு நாயகன் கயல் சந்திரன் பேசும்போது, “கிருஷ்ணாவுக்காவது இருபது நிமிடம் கதை சொன்னார்.. எனக்கோ டீ கொண்டு வரச்சொல்லி, அதை குடித்து முடிக்கும் அந்த பத்து நிமிடத்திற்குள் கதையை சொல்லிவிட்டார்.. இது ஒரு மல்டிஸ்டாரர் கதை என்றதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் கொஞ்சமல்ல, நிறையவே சூடான பார்ட்டி.. உதவியாளர்களை அவர் தலையில் கொட்டி வேலை வாங்குவதை பார்க்கும்போது எனக்கு கணக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் கிளாசில் இருப்பதுபோலவே தெரிந்தது. முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பில் கலந்துகொண்டது புதிய அனுபவமாக இருந்தது” என்றார்..
பாகுபலி-2 படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த கே புரடக்சன்ஸ் ராஜராஜன் பேசும்போது, “நாங்கள் கடந்த சில வருடங்களாக படம் தயாரிக்கலாம் என நினைத்து நல்ல துடிப்பான இயக்குனர்கள் யார் என தேடியபோது பல இடங்களிலும் இளன் என்கிற பெயர் அடிபட்டது.. இப்போதுதான் அவரை பார்க்கிறேன்.. அவருடன் விரைவில் படம் பண்ணும் நேரம் வரும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
படக்குழுவினர் பேசியதில் இருந்து கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்
இந்தப்படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டுமே, அதுவும் இரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.. அப்படியும் கூட 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் இளன்.
இதில் இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் எதுவும் இல்லையாம்.
நாயகன் கிருஷ்ணா பேசும்போது தனது அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தாடிவைத்த ரகசியத்தை உடைத்தார்.. அதாவது ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.. அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லையாம். அதனால் தான் அவரது தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினாராம்.. அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறாராம்.
இந்தப்படத்தில் கொஞ்சம் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ வேண்டும் என்பதற்காக தானே சொந்த முயற்சி எடுத்து ஜெயபிரகாஷ், கருணாஸ், கருணாகரன் ஆகியோரை குறைந்த சம்பளத்தில் கன்வின்ஸ் செய்து நடிக்க அழைத்து வந்தாராம் கிருஷ்ணா. அவர்களும் நிறைவான கேரக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு நடித்தார்களாம்.
படத்தில் காமெடியன்களில் ஒருவராக நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும் கயல் சந்திரனுக்கும் ஒரு அருமையான லிப் லாக் சீன் ஒன்று உள்ளதாம். தவிர இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாகவும் அவர்கள் பேச்சில் இருந்து அரசல் புரசலாக தெரிந்தது.. என்ன பண்ணியிருக்கிறார்களோ தெரியவில்லை..