“ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் நாக்கில் ஜலம் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியைதான். அது? நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி.
ஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம்… அவரவர் வீட்டு செல்லங்கள்தான்! கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்துவிடலாம். ஸ்கூலுக்கு போற பசங்கள்லாம் குடிக்குதே என்கிற ஆத்திரம்தான் இந்த ஆவேச டாஸ்மாக் தாக்குதலுக்கு காரணம். மக்கள் விழித்துக் கொண்ட இந்த அருமையான நேரத்தில், குடியின் தீவிரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது ஒரு ஷார்ட் பிலிம். சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தின் பெயர் ‘இன்பம் என்ற போதையாலே’.
அப்சல் ஹமீது குடிகார இளைஞனாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல பையன் எப்படி கூடா நட்பின் காரணமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அதன் விளைவாக என்னென்ன நடக்கிறது என்பதை அப்படியே நேரில் பார்ப்பது போல விவரிக்கிறது ‘இன்பம் என்ற போதையாலே’ குறும்படம். குறுகிய நேர படமாக இருந்தாலும் அதை பிரச்சார படம் போல எடுக்காமல், படு சுவாரஸ்யமாகவும், திடுக்கிடும் ட்விஸ்ட்டுகளுடனும் இயக்கியிருக்கிறார் அப்துல் கரீம். திரைக்கதை, வசனத்தில் அப்துல் கரீமுக்கு உதவியும் இருக்கிறார் இப்படத்தின் ஹீரோ அப்சல் ஹமீது.
ஷார்ட் பிலிம் மூலம் சினிமாவின் கதவுகளை துணிச்சலாக தட்டிப் பார்க்கும் இளைஞர்கள் கூட்டத்தில் தனியாக கவர்கிறார்கள் இப்படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும். குறிப்பாக இசை. சாந்தன் என்ற இளைஞர் அமைத்திருக்கும் பின்னணி இசை, படத்தை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.
தினந்தோறும் குறும்படங்கள் வெளியாகிக் கொண்டேயிருந்தாலும், சென்னை நகரம் முழுக்க போஸ்டரெல்லாம் அடித்து கலக்கியிருந்தார்கள் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு இவர்களே போஸ்டர் அடித்த காலம் மாறி, இவர்களுக்காக வேறு சினிமா கம்பெனிகள் போஸ்டர் அடிக்கும் காலம் வரும் போலதான் தெரிகிறது.
ஏனென்றால் படம் அப்படி!