விஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை? மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்?


பிகில் திரைப் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு மன சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.