கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.
காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.
இக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார். அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ் ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. ஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார்.
இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ்,கருப்பு ராஜா,சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலை அறிவுமதியும்,மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுயுள்ளனர்.இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர்.
காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம்.காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என ஒளிப்பதிவுடன்,கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி இருக்கின்ற தங்கர் பச்சான் சொல்கின்றார். தரமான படங்களையும்,பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.