விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகும் ஆவணப்படம்.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இந்த துயர சம்பவம் ’கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படமாகிறது.
தமிழகமெங்கும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் வறண்டன. சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். காய்ந்து போன பயிர்களை பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், பயிர்கள் கருகிப்போன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டும் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் ஆவணப்படமாக உருவாகிறது.
முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். கொலை விளையும் நிலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சுமார் 50 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. பலியான விவசாயிகளின் குடும்பங்களில் சிலவற்றை நேரிலேயே சந்தித்து அவர்களைப் பற்றிய விபரங்களுடன் அவர்களது பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் பலிக்கு என்ன காரணம், எப்படி நிகழ்ந்தது என்பதெல்லாம் விரிவாக விவரிக்கப்பட்டு அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறது கொலை விளையும் நிலம் ஆவணப்படம்.
இந்த ஆவணப்படத்தில் ஒரு பாடலும் இடம்பெற்றிருக்கிறது. ’அம்மண அம்மண தேசத்துல…’ எனத் தொடங்கும் அந்த பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜிவி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரகனி. படத்துக்கு பின்னணி இசையமைத்திருப்பது மெட்ரோ, உரு படங்களின் இசையமைப்பாளர் ஜோஹன்.
சுமார் பத்து நாட்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வந்திருக்கிறார்கள். படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பவர் கார்த்திக் குமார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்திருக்கிறார்கள். எஸ். கவிதா இணை தயாரிப்பு மேற்கொள்ள படத்தை தயாரித்திருக்கிறார் நா. சதக்கத்துல்லா.
விரைவில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் முன்னிலையில் திரையிடவும் ஆவணப்பட விழாக்களுக்கு அனுப்பவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
குரல் – இயக்குநர் சமுத்திரக்கனி
பாடல் – இயக்குநர் ராஜு முருகன்
இசை – ஜிவி.பிரகாஷ்
பின்னணி இசை – ஜோஹன்
படத்தொகுப்பு – ராஜேஷ் கண்ணன், ரமேஷ் யுவி
ஒளிப்பதிவு – கார்த்திக் குமார்
டிஐ – அருண்
ஒலி அமைப்பு – கார்த்திக்
எழுத்து – இயக்கம் – க.ராஜீவ் காந்தி