கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”.
உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.
யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.
அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
விஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் இன்று குத்துவிளக்கு “தீட்டி” துவக்கி வைத்தார்.
துவக்கி வைத்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார்.
இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். ரொம்ப நன்றி ஸ்ரீதர் சார்.” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்.
சிலிக்கான் சிலை மியூசியம் என்பதே புதுமையாக இருக்க, திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ் குத்து விளக்கு ஏற்றியது புதுமையோ புதுமை. ஆளுயர குத்து விளக்கு ஓவியத்தில் தூரிகையால் தீபம் “தீட்டி” மியூசியத்தை துவக்கி வைத்தது ரசனையாகவும், புதுமையாகவும் இருந்தது.
திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிலைகளை பார்த்து வியந்ததோடு, சிலைகளுடன் வித விதமான ஸ்டைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டனர். சிலிக்கான் சிலைகள் அந்த அளவுக்கு பார்ப்பவர்களைக் கவரும் வகையிலும் தத்ரூபமாகவும் இருப்பதே அதன் காரணம் என்று ஓவியர் ஏ. பி. ஸ்ரீதர் உள்ளிட்ட லைவ் ஆர்ட் மியூசியம் குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.