தன்னுடைய ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் இயக்குனர் தரணிதரன். இவர் தற்போது மெட்ரோ படத்தின் கதாநாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
‘மெட்ரோ’ படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெருமளவில் பெற்றவர் ஷிரிஷ். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், மழைக்கு ஒரு மிக முக்கிய பங்கு இருக்கிறது. எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தில் (மழை காலத்தில்) ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன்.
“பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்களின் கதை களங்களை பார்த்துவிட்டு நான் வியந்து இருக்கிறேன்.என் மீது முழு நம்பிக்கை வைத்து, என்னை இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்த இயக்குனர் தரணிதரன் சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.ஒரு கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை எப்படி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம் என்பது தான் இந்த படத்தின் கதை கரு.என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மைல் கல்லாக அமைய இருக்கும் இந்த படத்தில் பணியாற்றுவது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நடிகர் ஷிரிஷ்.