ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் சிரஞ்சீவி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் அடுத்த மாதம் 2-ந் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். படத்துக்கான வியாபாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. தெலுங்கில் இந்த படத்தின் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் தமிழில் இந்த படத்தை வெளியிடுவதற்கான உரிமையை சூப்பர்குட் பிலிம்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது. படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு செலவு செய்த தொகை அனைத்தும் ராம்சரணுக்கு கிடைத்து விட்டது என்கின்றனர்.
ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த நயன்தாராவுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் பெரிய வியாபாரம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.