வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றது.
கடந்த 1995 ஆம் ஆண்டு, தமிழில் உன்னை போல் ஒருவன் மற்றும் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் வெளியான ‘கூலி நம்பர் 1’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திற்கு இந்த ‘கொலையுதிர் காலம் 31 வது படம்.
“சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்த படத்தை ஹிந்தியில் நான் ‘கூலி நம்பர் 1’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தேன். அதனை தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது முதல் முறையாக கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றது. நான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை, அவ்வளவு திறமையானவர் அவர். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது. தென்னிந்திய திரையுலகில் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் நாங்கள் ஈடுபட இருக்கின்றோம்.” என்று உற்சாகமாக கூறுகிறார் பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர் வாசு பக்னானி.