‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் !

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் போனிகபூர் பேசியதாவது…,

“இந்த படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழில் நிறைய படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்துவருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படம் உருவாக்க உள்ளோம். தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.“

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது..,

“இந்த படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையை கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50 வது நாளில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். என்னுடன் இதுவரை உடன் பயணித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். படத்தை உருவாக்க பெரும் துணையாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமூக நீதிக்கான படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் அனைவருக்கும் நன்றி”

நடிகர் ஆரி பேசியதாவது..,

“எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால் தான் கிடைத்தது. நெடுஞ்சாலை படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது. இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி. முதல் முறையாக நான் நடித்த படத்திற்கான 50 ஆவது நாளில் இருக்கிறேன். இந்த படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தை பெரிய வெகுமதியாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி. “

ஷிவானி ராஜசேகர் கூறியதாவது..,

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படம் வெளியாகி 50 நாட்கள் ஓடி, ஓடிடியிலும் வரவேற்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “

நடிகை தான்யா ரவிசந்திரன் பேசியதாவது..,

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த போனி கபூர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது..,

நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் தான் இந்த படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.