தமிழ்ப்பட உலகில் புதிதாக ஒரு வில்லன் அறிமுகமாகிறார். பெயர் கே.ஜி.ஆர். சொந்த ஊர் மேட்டூர் பக்கத்திலுள்ள பூமனூர்.
பரிசல் என்ற படத்தில் அறிமுகமாகும் இவரது சொந்தப் பெயர் கோவிந்தன். தந்தை பெயர், மகன் பெயர் ஆகியவற்றுடன் தன் பெயரையும் இணைத்து கே.ஜி.ஆர். என்று பெயரை மாற்றிக் கொண்டாராம்.
ஏ-1 பிலிம் மேக்கர்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் ‘பரிசல்’ படத்தை சுந்தர் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார். இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் கே.ஜி.ஆர். இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பரிசலில்தான் செல்ல வேண்டும். இருப்பதோ ஒரே ஒரு பரிசல். ஒரு பாலம் கட்டப்பட்டால், சீக்கிரம் நகரத்திற்குச் செல்லலாம் என்று கிராமத்து மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக இருக்கிறார் கிராமத்தின் பண்ணையாரான உத்ரபாண்டி. பாலம் கட்டப்பட்டு விட்டால், கிராமத்து மக்கள் வேலை தேடி நகரத்திற்குச் சென்று விடுவார்கள், பிறகு தன் வயல்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள் என்று அவர் நினைப்பதே காரணம். அதனால் பரிசல் ஓட்டும் ‘தலைவாசல்’ விஜய்யை அவர் கொன்று விடுகிறார். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் ‘நிழல்கள்’ ரவியையும் கொன்று விடுகிறார்.
பாலம் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கும் யாரையும் தன் அடியாட்களை வைத்து தீர்த்துக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறார் உத்ரபாண்டி. இறுதியில் என்ன நடந்தது? பாலம் கட்டப்பட்டதா, இல்லையா? இதுதான் ‘பரிசல்’ படத்தின் கதை. இந்த கொடூர குணம் கொண்ட உத்ரபாண்டியாக நடிப்பவர்தான் கே.ஜி.ஆர்.
‘பரிசல்’ படத்தில் கே.ஜி.ஆருக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது. நடன நடிகை ரிச்சாவுடன் இவர் சேர்ந்து ஆடும். ‘புதுசா தினுசா மாம்பழம் பாரு அதைப் பறிச்சி கசக்கி ஜூஸைப் போடு’ என்ற ஆரம்பிக்கிறது அவருக்கான பாடல்!
ஆரம்ப காலத்தில் கல் வேலை, கிணறு தோண்டும் வேலை, லாரி ஓட்டுநர் என்று பல தொழில்களைச் செய்திருக்கும் கே.ஜி.ஆர்., பின்னர் சொந்தத்தில் வாங்கி ஓட்டினாராம். சொந்த ஊரில் விவசாயமும் செய்கிறார்.
‘பரிசல்’ படத்தில் மிகவும் அருமையாக இவர் நடித்ததைப் பார்த்து, ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய் இருவரும் இவரைப் பாராட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.ஜி.ஆர். ‘வீர திருவிழா’ படத்தில் பொன்வண்ணனின் சம்பந்தியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் இன்னொரு படம் ‘அடையாளம்.’