வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது,
“எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறியபடம் பெரியபடம் என்றில்லை. எல்லோரும் ஒரேப்போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது. இத்தனை பேர் இணைந்து எவனும் புத்தனில்லை படத்தை தயாரித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் விஜயசேகரனுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் இசை அமைப்பாளர் மரியா மனோகர், நடிகர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் இருக்கிறார்கள். இந்தவிழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதே இப்படத்தின் வெற்றிக்கான சாட்சியாக இருக்கிறது” என்றார்
இசை அமைப்பாளர் மரியா மனோகர் பேசியதாவது,
“இந்த டைட்டிலே எல்லாரையிம் ஈர்க்கக் கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தது. என்னுடைய முதல்படம் ஜே.கே ரித்திஷ் சார் நடிச்ச நாயகன் படம் தான். பணம் என்பது எனக்கு இரண்டாம் பட்சம் தான். இசை எனக்குப் பேஷன். நல்லவனாக இருப்பதால் நிறைய படங்களில் நிராகரிக்கப் பட்டிருக்கேன்.” என்றார்
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,
“என்னை அழைக்கிற விழாக்களுக்கு நான் தவறாமல் செல்வேன். அதுவும் சிறியபட விழா என்றால் மறுக்காமல் செல்வேன். இதுவரை நான் மூணேகால் கோடி இழந்திருக்கேன். ஆனால் இன்னும் இந்த சினிமா மீது ஆர்வமாக இருக்கிறேன். தயாரிப்பாளரை காப்பாற்றும் இயக்குநர்கள் என்றைக்கும் நல்லாருப்பார்கள். எவனாலும் புத்தனாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் போல ஒருவன் வர முடியாது. புத்தனாக இருக்க வேண்டாம். மனிதனாக இருந்தால் போதும். இங்கு அரசியல் துரோகிகள் தான் 90% பேர் இருக்கிறார்கள். சினிமாவிலும் இருக்கிறார்கள். இந்த இயக்குநர் விஜயசேகரன் நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் இனி அடுத்து படம் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்ய வேண்டும். பெரிய நடிகர்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு ஏரியாவை வாங்கிக்கொள்ளட்டுமே..வியாபாரம் ஆகாத ஹீரோக்கள் கூட டப்பிங் முன்னாடி பணம் கொடு என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றார்
நடிகர் ஆரி பேசியதாவது,
“இந்தவிழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விஜய்சேகரன் சாருக்காகத் தான் இந்த விழாவுக்கு வந்தேன். பாடல்கள் ட்ரைலர் இரண்டுமே நல்லா இருந்தது. இயக்குநர் ஒரு நல்லபடத்தை எடுத்திருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இந்தப்படம் துவங்கப்பட்டது. சினிமா எடுப்பவர்களுக்கு காலம்பூராவும் பிரசவ வலி தான். இயக்குநர் ஒவ்வொரு விசயங்களுக்கும் மெனக்கெடுவார். இப்படத்தின் கதை சைக்காலஜிக்கலாக நகரும். மேலும் சமூகப்பிரச்சனையைப் பேசும் படம் இது. சினிமாவில் யாருமே புத்தனாக இருக்கோமோ என்றால் நிச்சயமாக இல்லை. சிறிய படங்கள் வெளிவர சிரமப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும்” என்றார்
வேல.ராமமூர்த்தி பேசியதாவது,
“இந்த விழாவின் நாயகன் மரியா மனோகர் தான். சினேகனின் வரிகளை கேட்டால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்தகாலம் நினைவுக்கு வருகிறது. இப்படத்தின் பட்டாம் பூச்சி பாடல் என்னுடைய இளம் வயதை நினைவூட்டுகிறது. இப்படத்தின் இயக்குநர் டைட்டிலையே சிறப்பாக வைத்திருக்கிறார். படத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் விஜயசேகரன் என்னோடு அண்ணன் தம்பி போல பழகி வருகிறார். இந்த இயக்குநருக்கு ஒரு பேராசை. நினைத்ததை எல்லாத்தையும் நடத்த வேண்டும் என்று மெனக்கெடுவார். இந்தப்படம் பட்ஜெட்டில் அடங்கிய படமா இது? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் பாடல்காட்சிகள் எல்லாம் மிக சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் தான் தயாரிப்பாளரும்” என்றார்
இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது,
“முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது. எவனும் புத்தனில்லை சந்தர்ப்பம் கிடைக்காத வரை. வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது. இந்த இயக்குநர் பங்ஷன் நடத்துறதிலேயே கில்லாடியா இருக்கிறார். அதனால் படத்தையும் நல்லா எடுத்துருப்பார் என்று நம்புகிறேன். இப்படம் பிரமாதமா வந்திருக்கு. சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார். இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார்..அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்தப்பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்” என்றார்
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,
“முதல்ல இந்த மேடை நிறைந்திருப்பதற்கு காரணம் இயக்குநர் விஜயசேகரன் சேமித்து வைத்திருக்கும் நட்பு தான். என் 29 வருட அனுபவத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்ததில்லை என்று சொல்வேன். விஜயசேகரன் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமத்திற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இந்தப்படத்திற்கு துணை நின்ற எல்லா டெக்னிஷியன்களுக்கும் நன்றி. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும் போது படத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது. திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப்பேசி அலுத்துவிட்டது. நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை. இந்தத் திரைப்படத்துறையை யாராலும் அழிக்க முடியாது. அதேநேரம் இந்தத் திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. படங்களுக்கு பெரிய எதிரி இண்டெர்நெட் தான். அது அரசாங்கம் கையில் தான் இருக்கிறது. எவனும் புத்தனில்லை என்ற தலைப்பு மிகவும் சிறந்த தலைப்பு. சினேகன் பாடலாசிரியர் அல்ல..பாவை ஆசிரியர்” என்றார்
சினேகன் பேசியதாவது,
இந்தப்படத்தின் கதாநாயகன் சொன்னார்..இந்தப்படத்திற்காக நாங்கள் ரத்தம் சிந்தி இருக்கிறோம்” என்றார். உண்மை தான் அது. இந்தப்படத்திற்காக அனைவருமே இழந்திருக்கிறார்கள். உறவுகளால் பின்னப்பட்டு இந்தப்படத்தை ஆரம்பித்தார்கள். மன்னிக்க முடியாத குற்றத்தை எவராலும் செய்ய முடியாது. ஒரு படம் எடுக்குறதுக்குள்ள இருக்கும் அரசியலில் இருந்து வெளிவருவது மிகப்பெரிய விசயம். நல்ல கலைஞர்களுக்கு இடையில் நாகப்பாம்புகள் இருப்பதை கண்டடைய முடியபில்லை’ என்றார்
இயக்குநர் விஜயசேகரன் பேசியதாவது,
“என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், ஆர்.கே செல்வமணி அண்ணன்கள் தான். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. கவிஞர் சினேகன் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் எல்லாம் அவர்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை இந்த நிகழ்வுக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. வாழ்றதே ஒரு கஷ்டம் தான். நாம் எதை அடையணும்னு நினைக்கிறமோ அதுக்கான விலையைக் கொடுத்து தான் ஆகணும். படத்தை அனைவரும் திரையில் வந்து பாருங்கள்” என்றார்