தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன் – சாய் பல்லவி!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன்.

விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா.

லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது. லண்டன்ல இருக்கும் போதெல்லாம் லைகா மொபைல் தான் பேச உபயோகிச்சிருக்கேன். இப்போ லைகா தயாரிச்ச ஒரு நல்ல படத்துல நடிச்சிருக்கேன் என்றார் நடிகர் நிழல்கள் ரவி.

என் மகன் விஜயிடம் உதவி இயக்குனராக சில படங்கள்ல வேலை பார்த்துருக்கான். ஆனாலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததில்லை, இந்த படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சதுல மகிழ்ச்சி. விஜய் ரொம்ப கூலான இயக்குனர். இந்த படத்துல் நடித்தது பெருமையாக இருக்கிறது என்றார் நடிகர் சந்தான பாரதி.

ஒவ்வொரு ஷாட் நடித்து முடித்ததும் மானிட்டர்ல பாத்துட்டு வந்து, சரியா வராத விஷயங்களை சரி பண்ணிக் கொள்வார் சாய் பல்லவி. ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகை. அந்த குழந்தை வெரோனிகா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கா. ரொம்ப அருமையான டீம், ஷூட் முடிஞ்சு போச்சேனு வருத்தமா இருந்துச்சி என்றார் ரேகா.

இது ஒரு உணர்வுப்பூர்வமான படம். விக்ரம் வேதா ரிலீஸ் ஆன நேரத்தில் கரு படம் முக்கால்வாசி முடித்திருந்த விஜய் சார், என்னை அழைத்து உணர்வுப்பூர்வமான ஒரு படம், இசையமைக்கிறீங்களானு கேட்டார். நான் எமோஷனலான படத்தில் வேலை செய்வதை பெருமையாக நினைக்கிறேன். சொல்ல வந்ததை நேர்மையாக சொல்லும் ஒரு சில இயக்குனர்களில் விஜயும் ஒருவர். அவரோடு தொடர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன். ஹிட் ஆக்கணும்னு எந்த பாடலும் போடவில்லை. கதைக்கு நேர்மையான இசையை கொடுத்திருக்கிறோம். சித்ரா அம்மாவோடு ஒரு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டிருந்தேன், ஆனால் இந்தஅவர்களோடு ஒரு பாடலில் இணையும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

கரு படத்தின் கருவால் நல்ல அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது. சமீபத்தில் வந்த இசையமைப்பாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் சாம். தனது சிறப்பான இசையால் புரியாத புதிர், விக்ரம் வேதா என எல்லா படங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் மா என்ற குறும்படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். இந்த படத்துக்கு அதற்கு நேர் எதிரான ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். சாய் பல்லவிக்கு இது அறிமுகப்படம் என்று சொல்வதை விட, அதிகாரப்பூர்வ அறிமுகம் என்று தான் சொல்வேன். எனென்றால் பிரேமம் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சென்று சேர்ந்தவர். குழந்தைகளை விஜய் வேலை வாங்கும் விதம் மிகவும் என்னை கவர்கிறது என்றார் மதன் கார்க்கி.

நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போது எனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய் என்றார் நாயகி சாய் பல்லவி.

கரு என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். கரு படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்த படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். நிரவ்ஷாவுக்கு 2013லேயே இந்த கதை தெரியும். இந்த நேரத்துக்காக தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை 2 நிமிடங்களில் பாடலாக சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்கு பொருத்தமான இசையை கொடுத்திருக்கிறார். போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்கு பிறகு இந்த குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத்திருமகள் சாராவுக்கு பிறகு இந்த குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள் என்றார் இயக்குனர் விஜய்.

விழாவில் ஆடியோகிராஃபர் ராஜாகிருஷ்ணன், கலை இயக்குனர் ஜெயஸ்ரீ, படத்தொகுப்பாளர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா, நடிகர்கள் ஜெயகுமார், டிஎம் கார்த்திக், பேபி வெரோனிகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.