நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு புண்ணாகி விடுகிறது. மிக வித்தியாசமான உடல் மொழியில் விளையாடித் தீர்த்திருக்கிறார் சூரி. படத்தின் பெயர்தான் ‘கத்துக்குட்டி’யே தவிர, எல்லோருக்கும் கத்துக் கொடுக்கும் குட்டியாக தம்பி இரா.சரவணன் படத்தை உருவாக்கி இருக்கிறார். விவசாயப் பின்னணியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் முத்து முத்தாக நெஞ்சை ஈர்க்கிறது. நல்ல கருத்தை சொல்லும் விதமாகச் சொன்னால், கடைக்கோடி ரசிகனுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தக் கத்துக்குட்டி நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!” என்றார்.
சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து, “படம் பார்த்து நிறைய இடங்களில் சிரித்தேன்; நிறைய இடங்களில் அழுதேன். வழக்கமான படங்களில் ஒன்றாக இல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாகப் படத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக படத்தில் வரும் ஒரு பாட்டி பாத்திரம் மனதைக் கொண்டாட வைத்துவிட்டது. மண் சார்ந்த பதிவை இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரசியமான திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது சிறப்பு. இறுதிக்கட்ட காட்சியில் என்னையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டினேன். இந்த மண்ணுக்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் ராஜமரியாதை செய்திருக்கிறது ‘கத்துக்குட்டி’ படம்.” என்றார்.
‘கத்துக்குட்டி’ படம் அக்டோபர் முதல் தேதி திரைக்கு வருகிறது.