“கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேது. இவரது நடிப்பில் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள படம் “வாலிப ராஜா”. சந்தானம், விஷாகா, வி.டி.வி.கணேஷ் என கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிப்படத்தின் குழுவினரே மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படம் தனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்கிறார் சேது.
அடிப்படையில் மருத்துவ துறையில் எம்.பி.பி.எஸ். படித்தவரான சேது, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். எனினும் மருத்துவ படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட சேது, திரைத்துறையில் தனது மருத்துவ திறனையும் இணைத்தால் என்ன என சிந்தித்தன் விளைவே இவரை “டெர்மடாலஜி ” எனும் தோல் மற்றும் அழகை மேம்படுத்தும் சிறப்பு மருத்துவ படிப்பை படிக்க வைத்தது எனலாம்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் மட்டுமே ஒலித்து வந்த “டெர்மடலாஜி” எனும் வார்த்தையை தமிழகத்தில் பரவலாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக்கூறும் சேது, அதற்காக சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் டெர்மடாலஜி குறித்த சிறப்பு பயற்சிகளை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவமனையை சென்னை போயஸ்கார்டனில் விரைவில் நிறுவ உள்ள சேது அதன் மூலம் திரைத்துறையினர் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் தான் சேவை ஆற்ற உள்ளதாக கூறுகிறார்.
டெர்மலடாஜி பற்றி விரிவாக பேசும் சேது, இம்மருத்துவ முறையில் வயதான தோற்றத்தில் இருந்து இளமையான தோற்றத்திற்கு மாறுவது எளிது என்றும், உதாரணத்திற்கு நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை “போடக்ஸ்” எனும் ஊசியின் மூலம் விரைவில் சரி செய்து சுருக்கங்கள் அற்ற பொலிவான முக அழகை பெறுவது, ஆண்ட்டி ஏஜினும் எனும் வயதான தோற்றத்திலிருந்து இளமையான தோற்றத்திற்கு மாற்றச்செய்யும் ஒரு அதிநவீன மருத்துவமுறை, மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவது, வறண்ட சருமத்தை போக்குவது என பலவகைகள் இருப்பதாக கூறுகிறார்.
தொடர்ந்து திரைத்துறையில் நடிப்பதும் குறித்து பேசிய அவர், கலையும், கடமையும் தனது இரு கண்கள் போன்றது என்றும், எனினும் கடமைக்கு இடையூறு இல்லாத வகையில் கலைப்பயணமும் தொடரும் என்கிறார். மேலும், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு தனது நடிப்பு எனும் கலையின் மூலமும், மருத்துவம் எனும் கடமையின் மூலம் காலமெல்லாம் சேவையாற்ற போவதாக உற்சாகமுடன் கூறுகிறார் சேது.